பாமக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 24 தீர்மானங்கள் - முழு விவரம்! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலுக்காக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் முன்னிலையில் நடந்த இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலக பாமா மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், கட்சியின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த சிறப்பு பொதுக்குழுக்கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு.

தீர்மானம் 1 : தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சமூகநீதிக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. சமூகநீதியைப் பாதுகாப்பதற்கான அடிப்படை ஆயுதம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தான் என்பதை உணர்ந்து கொண்ட பல மாநில அரசுகள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளன. மேலும் பல மாநிலங்கள் அதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன. ஆனால்,  தமிழக அரசோ, கேளாக்காதினராய், சமூகநீதிக் குரல்களை செவி மடுக்க மறுப்பது வருத்தமளிக்கிறது.



1980&ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்ட நாளில் தொடங்கி 43 ஆண்டுகளாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக மருத்துவர் அய்யா அவர்கள் குரல் கொடுத்து வருகிறார். அதன்பிறகு  1989, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டது. ஆனால், நல்வாய்ப்புக்கேடாக அந்த வாய்ப்புகள் தவறவிடப்பட்டன.

இந்தியாவின் முதல் சாதிவாரிக்கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடகம் முந்திக்கொண்டு அந்த வாய்ப்பைப் பறித்துக் கொண்டது. அடுத்து பிகார் மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் அம்மாநிலத்தில் இட ஒதுக்கீட்டின் அளவை 60%&லிருந்து 75% ஆக உயர்த்தியது, வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 94 லட்சம் குடும்பங்கள், சுயதொழில் தொடங்குவதற்காக தலா ரூ.2 லட்சம் வழங்குவது, சொந்த வீடில்லாத 67 லட்சம் குடும்பங்களுக்கு  சொந்த வீடு கட்டித்தருவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒதிஷா அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்திருக்கிறது. ஆந்திரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களும் இதை செய்யவிருக்கின்றன.

சமூகநீதி படிக்கட்டுகளில் கீழே உள்ள மாநிலங்கள் எல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளும் சூழலில், படிக்கட்டுகளின் உச்சியில் உள்ள தமிழ்நாடு அரசு அதன் தேவையை உணர்ந்து கொள்ள வில்லை அல்லது அப்படி ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படக்கூடாது என்று விரும்புகிறது. அதனால்,  தமிழக அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான வாய்ப்புகளும், அதிகாரங்களும் இருக்கும் நிலையில், அவற்றை பயன்படுத்தாமல், மத்திய அரசு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதுகிறார். சமூகநீதி வரலாற்றில் இதைவிட மோசமான கேலிக்கூத்து இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்கவும், அனைத்துத் தரப்பினருக்கும் முழுமையான சமூகநீதி வழங்கவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியது கட்டாயமாகும். இதை உணர்ந்து தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்துவதற்கான  நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2 : வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீட்டை தாமதிக்கும் தமிழக அரசுக்கு கண்டனம்

தமிழ்நாட்டில் மிக மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு  வழங்க எந்தத் தடையும் இல்லை; உரிய தரவுகளைத் திரட்டி அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம்  என்று 31.03.2022&ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இரு ஆண்டுகள் நிறைவடையப்போகின்றன.

தமிழக அரசு நினைத்திருந்தால் அதிக அளவாக 6 மாதங்களில் தரவுகளைத் திரட்டி, வன்னியர்  இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 10 மாதங்களுக்குப் பிறகு 12.01.2023&ஆம் நாள் தான், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து 3 மாதங்களில் பரிந்துரை  வழங்கும்படி மாற்றியமைக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசு ஆணையிட்டது. ஆனால், அந்த 3 மாதங்களில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. அதன்பின் வன்னியர்  இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்கான காலக்கெடுவை மேலும் 6 மாதங்கள், மேலும் 3 மாதங்கள் நீடித்து தமிழக அரசு ஆணையிட்டது. ஒட்டுமொத்தமாக ஓராண்டு காலம் முடிவடைந்தும் ஆக்கப்பூர்வமாக எந்தப் பணியும் நடைபெறவில்லை. காலக்கெடு இப்போது மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக நிலையில் வன்னியர்கள் எந்த அளவுக்கு பின்தங்கியிருக்கிறார்கள் என்பதை தரவுகள் மூலம் உறுதி செய்ய இரு ஆண்டுகள் எடுத்துக் கொண்டும் எந்த முன்னேற்றமும் ஏற்படாததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சருக்கு மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த இரு ஆண்டுகளில் 8 முறை கடிதம் எழுதியுள்ளார்; பல முறை தொலைபேசியில் பேசியுள்ளார்; ஒருமுறை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருக்கிறார். பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மூன்று முறை முதலமைச்சரை சந்தித்துள்ளார். கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான நிர்வாகிகள் குறைந்தது 25 முறை அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளனர். இவ்வளவுக்குப் பிறகும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்தாமல் இருப்பதன் பொருள், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க விருப்பம் இல்லை என்பது தான் என்று புரிந்து கொள்ள முடிகிறது. வன்னியர்களுக்கான சமூகநீதியை தாமதிக்கும்/மறுக்கும் தமிழக அரசுக்கு பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது; வன்னியர்களுக்கு விரைந்து உள் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3 : 27% ஓபிசி உள் இட ஒதுக்கீடு & ரோகிணி ஆணைய அறிக்கையை செயல்படுத்துக!

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்க நீதிபதி ரோகிணி ஆணையம் கடந்த 02.10.2017&இல் அமைக்கப்பட்டது. 3 மாதங்களில் அளித்திருக்க வேண்டிய அறிக்கையை ஆணையம், 6 ஆண்டுகளுக்குப் பிறகு 31.07.2023&இல் தான் வழங்கியது. அதன்பின் 6 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், ஆணைய அறிக்கை இன்னும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

ஓபிசி வகுப்பில் 5.60% சாதிகள், 75.02 % பயன்களை அனுபவிக்கின்றன. பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளில் 75 விழுக்காடான 1977 சாதிகளுக்கு 2.66% இடங்கள் மட்டுமே கிடைக்கின்றன. இந்த கொடிய சமூக அநீதி நீடிக்கக்கூடாது. அதற்காக நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கையை உடனடியாக  வெளியிட்டு, அதன் பரிந்துரைப்படி உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4 : வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவைப் பயிர்களுக்கும், சம்பா சாகுபடி செய்யாத  உழவர்களுக்கும் தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்

2023&24ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு உழவர்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பருவத்தில் 5.2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், வறட்சி காரணமாக காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறக்கப்படாததால், 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குறுவை பயிர்கள் நீரின்றி கருகிவிட்டன. 1.5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் கருகுவதில் இருந்து தப்பிவிட்டது என்றாலும், வழக்கமாக கிடைக்கும் விளைச்சலில் பாதி கூட கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்காத அரசு, வெறும் 40,000 ஏக்கருக்கு மட்டும் ஏக்கருக்கு 5,400 ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கியது. வறட்சியால் உழவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இது போதுமானதல்ல.

தமிழ்நாடு முழுவதும் சம்பா/தாளடி பருவத்தில் 30 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ஆனால், மேட்டூர் அணையிலிருந்து காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட வில்லை என்பதாலும், பிற மாவட்டங்களில் போதிய நீர் ஆதாரம் இல்லை என்பதாலும் 20 லட்சம்  ஏக்கருக்கும் குறைவான பரப்பிலேயே நெல் சாகுபடி செய்யப்பட்டது. அதனால் வாழ்வாதாரம் இழந்த  உழவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

அதன்படி, முழுமையாக பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் குறுவை பயிருக்கு, ஏக்கருக்கு ரூ. 40,000 வீதமும், ஓரளவு பாதிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் ஏக்கர் குறுவை பயிருக்கு தலா ரூ.25,000 வீதமும், சம்பா நெற்பயிர்களை பயிரிட முடியாத உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 வீதமும்  இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5: உழவர் நலனுக்கு எதிரான தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்பப் பெறுக!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கடந்த ஆண்டு ஏப்ரல் 21&ஆம் தேதி கொண்டு வரப்பட்டு எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட ‘‘தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்டங்களுக்கான சட்ட மசோதா (ஜிணீனீவீறீ ழிணீபீu லிணீஸீபீ சிஷீஸீsஷீறீவீபீணீtவீஷீஸீ (யீஷீக்ஷீ ஷிஜீமீநீவீணீறீ றிக்ஷீஷீழீமீநீts) கிநீt, 2023)’’ உழவர்களுக்கு  எதிரானது என்றும், நீர்நிலைகளை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்காகவே இந்த சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக நம்புகிறது.

இந்த சட்டத்தின்படி, 100 ஏக்கருக்குக் குறையாத இடத்தில் நீர்நிலையோ, ஓடையோ, வாய்க்காலோ இருந்து அந்த இடத்தில் உள்கட்டமைப்பு, வணிகம், தொழிற்துறை, வேளாண் சார்ந்த திட்டத்தை ஒருவர் செயல்படுத்த விரும்பினால் அத்திட்டத்திற்கு சிறப்புத் திட்ட அனுமதிகோரி அரசிடம் விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கும்போதே திட்ட நிலத்தில் ஒட்டுமொத்த நீர் சேமிப்பு குறைக்கப்படமாட்டாது, வாய்க்கால்கள், ஓடைகளின் கொள்திறன் அல்லது திட்ட நிலத்தின் மேல்பகுதியிலும் கீழ்பகுதியிலும் நீரோட்டமானது குறைக்கப்படாது என்று உறுதியளிக்க வேண்டும். அத்தகைய உறுதிமொழியுடன் விண்ணப்பித்தால்,  அது முக்கியத்துவம் வாய்ந்த திட்டமென அரசு கருதினால் நில எளிய நடைமுறைகளுக்குப் பிறகு அந்த நீர்நிலைகளை தனியாருக்கு வழங்கி ஆணை வெளியிடும்.

இந்தத் திட்டத்தால் வேளாண்மைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல விரிவான அறிக்கைகளை பா.ம.க. ஏற்கனவே வெளியிட்டுள்ளது. உழவுத் தொழிலையும், உழவர்களையும் காக்க தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்டங்களுக்கான சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் & அதற்கான முன்வரைவை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க. கோருகிறது.

தீர்மானம் 6 : என்.எல்.சி சுரங்கங்கள், சிப்காட் உருவாக்கம்/ விரிவாக்கத்திற்காக நிலம் கையகப் படுத்த தடை விதிக்க வேண்டும்!

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நிலக்கரி சுரங்கங்கள், சிப்காட் விரிவாக்கம் ஆகியவற்றுக்காக  வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. 3வது சுரங்கம் அமைப்பதற்காகவும், ஏற்கெனவே உள்ள முதலாவது மற்றும் 2வது சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காகவும், 25 ஆயிரம் ஏக்கர்,  வீராணம் & பாளையங்கோட்டை சுரங்கத் திட்டத்திற்காக 45,000 ஏக்கர், சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே சுரங்கத் திட்டத்திற்காக 21,000  ஏக்கர் என மொத்தம் 91 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அடுத்த சில ஆண்டுகளில் கையகப்படுத்தப்படவுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக 3 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளன. பல இடங்களில் புதிதாக சிப்காட் வளாகம் அமைப்பதற்காக சராசரியாக 2000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. சென்னைக்கு அருகில் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை வட்டங்களில் அறிவு நகரம் அமைப்பதற்காக 1700 ஏக்கர்  கையகப்படுத்தப் படவுள்ளது. இந்தத் திட்டங்களை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தொழில் வளர்ச்சி தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தவிர்க்க முடியாதது என்பதை பா.ம.க. நன்கு உணர்ந்திருக்கிறது. ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே வேலை கொடுக்கும் தொழில் திட்டங்களுக்காக பல்லாயிரம் பேருக்கு வாழ்வாதாரம் வழங்கும் விளைநிலங்களை பறிக்கக்கூடாது. அதனால், உழவர்கள் வேலை இழப்பது மட்டுமின்றி, உணவுப் பற்றாக்குறையும் ஏற்படும் ஆபத்து உள்ளது. இதை உணர்ந்து  நிலக்கரி சுரங்கங்கள், சிப்காட் வளாகங்கள் ஆகியவற்றுக்காக வேளாண் விளைநிலங்களை கையகப் படுத்த அரசு தடை விதிக்க வேண்டும் என்று பா.ம.க. சிறப்புப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 7 : டி.என்.பி.எஸ்.சிக்கு தலைவர், உறுப்பினர்களை நியமித்து வலுப்படுத்த வேண்டும்!

தமிழ்நாட்டின் அரசுத்துறை & பொதுத்துறை நிறுவனங்களுக்கு அதிகாரிகளையும், பணியாளர்களையும் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்ட, அரசியலமைப்புச் சட்டப்படியான அமைப்பான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) செயல்பட முடியாத அளவுக்கு முடங்கிக் கிடக்கிறது. அந்த அமைப்புக்கு 2022 ஜூன் மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தலைவர் இல்லை.  ஆணையத்திற்கு மொத்தம் 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இப்போது 4பேர் மட்டுமே  உள்ளனர். அவர்களில் இருவர் நடப்பாண்டின் பிற்பகுதியில் ஓய்வு பெறவுள்ளனர். அதன்பின் வெறும்  இரு உறுப்பினர்களுடன் செயல்படவே முடியாத அளவுக்கு தேர்வாணையம் முடங்கி விடக் கூடும்.

யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதன் முழு வலிமையுடன் செயல்பட்டு வருகிறது. அதனால்,  அதன் மூலம் அறிவிக்கப்படும் போட்டித்தேர்வுகள் குறித்த காலத்தில் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படுகின்றன. ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்படும் போட்டித்தேர்வுகளில் பெரும்பாலானவை குறித்த நேரத்தில் நடத்தப்படுவதில்லை; குறித்த நேரத்தில் முடிவுகள் வெளியிடப்படுவதில்லை. அதனால் தேர்வர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

2024&ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி மூலம் 3772 பேர் மட்டுமே அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப் படவுள்ளனர். இது போதுமானதல்ல. இந்த நிலையை மாற்ற டி.என்.பி.எஸ்.சிக்கு உடனடியாக தலைவர் மற்றும் 10 உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். அதிக எண்ணிக்கையிலான போட்டித் தேர்வுகளை  நடத்தி, குறித்த காலத்தில் முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. கோருகிறது.

தீர்மானம் 8 : படித்த இளைஞர்களுக்கு 6 லட்சம் அரசு வேலைகளை வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டில் அரசு வேலை என்பது கனவாகி வருகிறது. தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை 22,781 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 70 லட்சம் பேர், பதிவு செய்யாமல்    60 லட்சம் பேர் என 1.30 கோடி பேர் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அரசு வேலை பெரும் தகுதியுடன் 5 லட்சம் பேர் கல்லூரிகளில் இருந்து வெளி வருகின்றனர். ஆனால், அவர்களில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேருக்குக் கூட வேலை வழங்காதது தமிழக அரசின் தோல்வி.

2021&ஆம் ஆண்டுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால், காலியாக கிடக்கும் 3.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த மூன்றாண்டுகளில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அந்த எண்ணிக்கையையும், அரசால் நியமிக்கப்பட்ட  அரசு ஊழியர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், திமுக அரசு அதன் வாக்குறுதியை நிறைவேற்ற குறைந்தபட்சம் 6 லட்சம் அரசு வேலைகளை வழங்கியாக வேண்டும். தமிழ்நாட்டில் அரசு வேலைகளுக்கான எதிர்பார்ப்பும், தேவையும் அதிகரித்திருக்கும் நிலையில், சிறப்பு ஆள்தேர்வு முகாம்களை நடத்தி அடுத்த இரு ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு அரசு வேலைகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. சிறப்பு பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 9: தமிழ்நாட்டில் தனியார்  தொழிற்சாலைகளின் வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க சட்டம் இயற்ற வேண்டும்!

தொழில்துறை முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு அதிகம் வருகின்றன; தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் தொடங்கப்படுகின்றன என்றாலும் அதன் பயன்கள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என்பது தான் எதார்த்தமான உண்மை. சென்னை, கோவை, ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் 5000 பேர் முதல் 10,000 பேர் வரை பணியாற்றும் தொழிற்சாலைகள் அதிக எண்ணிக்கையில் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் 20% ஊழியர்கள் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல.

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திரம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ளூர் மக்களுக்கு மட்டுமே வேலை வழங்குவதற்கான சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள ஆந்திராவின் ஸ்ரீ சிட்டி தொழில் நகரத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் வேலை பெற முடியவில்லை. ஆனால், கும்மிடிப்பூண்டியில் தொடங்கி  திருப்பெரும்புதூர் வரை உள்ள தொழிற்சாலைகளில் அதிக எண்ணிக்கையில் ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலத்தவர்கள் தான் வேலை செய்கின்றனர். அங்கு தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 75% தமிழர்களுக்கே வேலை வழங்க வகை செய்யும் சட்டம் இயற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப் பட்டிருந்தது. ஆனால், அதை நடைமுறைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு அரசின் சார்பில் ஏராளமான சலுகைகள் வழங்கப்படும் நிலையில், அந்த நிறுவனங்களில் வேலை பெறும் உரிமை தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டும் தான் உள்ளது. அதை சட்டப்பூர்வமாக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் குறைந்தது 80 விழுக்காட்டை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்குவதற்கு வகை செய்யும் சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. பொதுக்குழு வேண்டுகிறது.

தீர்மானம் 10 : பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்& வேலைநிறுத்தத்தை தவிர்க்க வேண்டும்!

பழைய ஓய்வூதியம், ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்ளிட்ட  10 கோரிக்கைகளை வலியுறுத்தி   வரும் பிப்ரவரி 15-ஆம் நாள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தையும், பிப்ரவரி 26-ஆம் நாள் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தையும் நடத்தப்போவதாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ   அறிவித்திருக்கிறது.  ஆசிரியர்கள், அரசு  ஊழியர்களின்  கோரிக்கைகள் நியாயமானவை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 20 ஆண்டுகளுக்கு மேலாகவும், பிற கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாண்டுகளுக்கு மேலாகவும் அவர்கள் போராடி வருகின்றனர்.  அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்  என்று 20 ஆண்டுகளாகவே அதிமுகவும்,  திமுகவும் மாறி மாறி வாக்குறுதிகளை வழங்கினாலும் அவை எதையும் இரு கட்சிகளின் அரசுகளும் நிறைவேற்றவில்லை.  2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் அரசு ஊழியர்களின்  கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கிறது.

 மார்ச் மாதத்தில்  பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கப்படவுள்ளன.  பிப்ரவரியில் மக்களவைத் தேர்தல்கள் அறிவிக்கப்படவுள்ளன. இத்தகைய சூழலில் அரசு  ஊழியர்களும்,  ஆசிரியர்களும் வேலைநிறுத்தம் மேற்கொண்டால், கல்வி எந்திரமும், அரசு எந்திரமும் முடங்கி விடும். இதைத் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் அரசு உடனடியாக பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்றி  தொடர் வேலைநிறுத்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 11 : போக்குவரத்துப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: புதிய ஊதிய ஒப்பந்தப் பேச்சுக்களை உடனடியாக தொடங்க வேண்டும்!

15-ஆம் ஊதிய ஒப்பந்த பேச்சுகளை உடனே தொடங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு  96 மாதங்களாக வழங்கப்படாத அகவிலைப்படி  உயர்வை வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் பொங்கல் திருநாளுக்கு முன்பாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினார்கள். இந்தச் சிக்கலில் தலையிட்ட உயர்நீதிமன்றம், வேலைநிறுத்தத்திற்கு தடை விதித்தது. தொழிற்சங்கங்களுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும்; அதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால், போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம் நடத்தலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதன்படி இரு தரப்பிற்கும் இடையே ஜனவரி 19&ஆம் தேதி நடைபெற்ற பேச்சு தோல்வியடைந்த நிலையில், பிப்ரவரி 7&ஆம் நாள் அடுத்த பேச்சு நடைபெறவுள்ளது.

ஜனவரி 19&ஆம் நாள் நடைபெற்ற பேச்சுகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் கலந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவர் பங்கேற்காதது இந்த சிக்கலைத் தீர்ப்பதில் அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. அவற்றில் சாத்தியமான ஒரு சில கோரிக்கைகளையாவது நிறைவேற்றி சிக்கலை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாறாக தன்முனைப்பு காட்டி சிக்கலை தீவிரமாக்கக்கூடாது.

இன்றைய சூழலில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீண்டும் ஒரு முறை வேலைநிறுத்தம் செய்தால் அதை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, அரசு விட்டுக் கொடுக்கும் மனநிலையுடன்  செயல்பட்டு போக்குவரத்துப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். 15&ஆம் ஊதிய ஒப்பந்தப் பேச்சுகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று பா.ம.க. கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 12 : தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்புகள் & தமிழ்நாடு அரசு கோரிய நிவாரண நிதியை மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் திசம்பர் 3, 4 ஆகிய தேதிகளிலும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் திசம்பர் 17, 18 ஆகிய தேதிகளிலும்  பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் அந்தப் பகுதிகளில் வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டன. மழை வெள்ளம் பாதிப்புகளை ஆய்வு செய்த தமிழக அரசு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்பு, நிவாரண பணிக்காக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களுக்கு ரூ.19,692.69 கோடி, தென் மாவட்டங்களுக்கு ரூ.18,214.52 கோடி என மொத்தம் ரூ.37,907.21 கோடி நிவாரணை நிதி  வழங்கும்படி கோரியது.  ஆனால், மழை & வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டு இரு மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், இன்று வரை தமிழகத்திற்கு மழை நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை.

மத்திய அரசிடமிருந்து நிதி உதவி கிடைக்காததால், தமிழ்நாட்டில் மழை, வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மறுகட்டமைப்பு பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. நிவாரண நிதியை விரைந்து வழங்கும்படி முறையிட சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜனவரி 21&ஆம் தேதி வாக்கில் அறிக்கை பெறப்பட்டு, ஜனவரி 27&ஆம் தேதிக்குள் நிவாரண நிதி அறிவிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அதில் இன்று வரை எந்தவித முன்னேற்றமும் இல்லை. தமிழ்நாடு ஏற்கனவே நிதி நெருக்கடியால் அவதிப்படும் நிலையில், அதன்  நெருக்கடியை பகிர்ந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு கோரிய நிவாரண நிதியை உடனடியாக  வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பா.ம.க. சிறப்புப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 13 : உச்சநீதிமன்றத் தடையை மீறி மேகதாது அணைகட்ட முயற்சி மேற்கொள்ளும் கர்நாடக அரசுமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதியை வழங்குவது குறித்துக் கூட காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதன் பொருள் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்பதுதான்.

ஆனால், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் அடுத்தடுத்த நடவடிக்கைகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்திய குடியரசு நாள் நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட், மேகதாது அணை கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்துதல், திட்டமிடல் உள்ளிட்ட பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளதாக அறிவித்திருக்கிறார். இது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.

காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து விவாதிப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் பிப்ரவரி 1ம் தேதியான இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது குறித்த விவாதம் இடம் பெறவில்லை. இவ்வாறு விவாதிப்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது ஆகும். ஆனால், இதையெல்லாம் மறைத்து விட்டு இன்றைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க உள்ளதாக கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் கூறிவருகிறார். இது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் ஆகும்.

மேகதாது அணை விவகாரத்தில் தேவையற்ற பதற்றங்களை ஏற்படுத்தி வரும் கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மேகதாது சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் என்றால், அந்த அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாமக பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 14 : முல்லைப் பெரியாற்றின் புதிய அணை கூடாது; அனுமதியின்றி பதற்றத்தை ஏற்படுத்தும் கேரள அரசை கண்டிக்க வேண்டும்

முல்லைப் பெரியாற்று அணை வலுவிழந்து விட்டது தொடர்பான வழக்குகளை விசாரிக்த உச்சநீதிமன்றம், அந்த அணை மிகவும் வலுவாக இருப்பதாகக் கூறி தீர்ப்பளித்ததுடன், முல்லைப்பெரியாறு அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்ட பிறகு, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்று தமிழ்நாட்டு அரசுக்கு ஆணையிட்டது. இந்த வழக்கில் கேரள அரசு தாங்கள் செய்த சீராய்வு மனுக்களை செய்துவிட்ட உச்சநீதிமன்றம், அங்கு புதிய அணை கட்டும் பேச்சுக்கே இடமில்லை என்றும் உறுதிபடக் கூறியது.
இவ்வளவுக்குப் பிறகும், கேரள மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தொடரைத் தொடங்கி வைத்துப் பேசிய அம்மாநில அரசின்  ஆசிப் முகமது கான், முல்லைப் பெரியாற்று அணை வலுவிழந்து விட்டதால் அதற்குப் பதிலாக நவீன வடிவமைப்பு, கட்டுமானத் தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
முல்லைப்பெரியாற்று அணை வலுவாக உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது மட்டுமின்றி, உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட வல்லுநர் மூலம் இதுவரை பலமுறை அணையை ஆய்வு செய்து அதன் வலிமையை உறுதி செய்துள்ளது. அதன் பிறகும் தேவையின்றி முல்லைப்பெரியாற்று அணை விவகாரத்தை கேரளஅரசு சர்ச்சையாக்குவது இருமாநில உறவுகளை பாதிக்கும். எனவே, முல்லைப்பெரியாற்று அணை விவகாரத்தில் தேவையின்றி சர்ச்சை எழுப்ப முயலும் கேரள அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். அதுமட்டுமின்றி பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை அகற்றி அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்குமாறு கேரள அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று பாமக பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 15 : தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும்!

வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சிறைபிடிப்பன அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை கடற்படை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. சிங்களப்படையினரின் இந்த அத்துமீறலை அனுமதிக்க முடியாது.

இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. அதனால் தமிழக மீனவர்களும், இந்திய மீனவர்களும் காலம் காலமாக எந்தெந்த பகுதிகளில் மீன்பிடித்து வந்தார்களோ, அதே பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பது தான் சரியானதாகும்.

இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்திற்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 16: தமிழ்நாட்டில் மக்களைக் காக்க மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள்!

தமிழ்நாட்டில் மதுவால் ஏற்படும் சீரழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்த தமிழக அரசு, 500 மதுக்கடைகளை மூடியதுடன் அதன் கடமை முடிந்து விட்டதாகக் கருதி ஒதுங்கிவிட்டது. மதுக்கடைகள் மூடப்பட்ட பகுதிகளில்  இப்போது புதிது புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. மதுவுக்கு எதிரான மக்கள் குரல் ஒடுக்கப்படுகிறது.

மதுவணிகத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் தானியங்கி எந்திரம் மூலம் மது வணிகம், 90 மிலி காகிதக் குடுவைகளில் மது வணிகம், பன்னாட்டு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு அரங்கங்களில் மது வணிகம் என சமூகக் கேடான திட்டங்களை தமிழக அரசு திணித்து வருகிறது. அக்கேடுகளை நீதிமன்றங்கள் மூலமாகவும், அரசியல் எதிர்ப்புகள் மூலமாகவும் பாட்டாளி மக்கள் கட்சி தடுத்து வருகிறது.

மற்றொருபுறத்தில் சட்டவிரோத மது வணிகம் அதிகரித்து விட்டது. தஞ்சாவூரில் கடந்த மே 21&ஆம் நாள் டாஸ்மாக் மதுக்கடை குடிப்பகத்தில் விற்கப்பட்ட மதுவில் சயனைடு நஞ்சு கலக்கப்பட்டிருந்ததால் அதைக் குடித்த இருவர் உயிரிழந்தனர். அதன்பின் 256 நாட்களாகியும் அரசு விற்பனை செய்த மதுவில் நஞ்சு கலந்தவர்கள் யார்? என்ற வினாவுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. மதுவுக்கு மாணவ, மாணவியரும், சிறுவர்களும் அடிமையாவது அதிகரித்து வருகிறது. இதேநிலை நீடித்தால் எவராலும்  காப்பாற்ற முடியாத அளவுக்கு தமிழ்நாடு சீரழிந்து விடும். இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும்.

அதற்காக தமிழ்நாட்டில் ஒரே கட்டத்திலோ, படிப்படியாகவோ மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்; அதன் மூலம் தமிழ்நாட்டு மக்களைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 17: தமிழ்நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கஞ்சாவை ஒழிக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் மதுவைக் கடந்த பெரும் தீமையாகவும், சீரழிவாகவும் கஞ்சா உருவெடுத்துள்ளது, தென்னிந்தியாவின் கஞ்சா தலைநகரம் என்று பெயரெடுக்கும் அளவுக்கு சென்னை மாநகரில் எந்த பகுதியை எடுத்துக் கொண்டாலும் அங்கு பெட்டிக்கடைகள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் கஞ்சா கிடைக்கிறது. சென்னை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கஞ்சா வணிகம் தலைவிரித்தாடுகிறது.

தமிழ்நாட்டில் கஞ்சாவை ஒழிக்க வேண்டும் என்று கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இன்றைய முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் ஆகியோரிடம் நேரிலும் இதை வலியுறுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து கஞ்சா ஒழிப்பு சோதனைகள் பல முறை நடத்தப்பட்டது. ஆனாலும், கஞ்சா வணிகம் அதிகரிக்கிறதே தவிர, ஓரிடத்தில் கூட குறையவில்லை.

காவல்துறையின் அலட்சியமும், துணையும் தான் கஞ்சா வணிகம் தடையின்றி நடப்பதற்கு காரணம்  ஆகும். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து கஞ்சா கொண்டு வரப்படுகிறது என்பது காவல்துறையினருக்கு நன்றாகத் தெரியும். ஆனால், பல்வேறு தரப்புகளிலிருந்து  கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக கஞ்சா வணிகத்தைக் காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை.

எனவே, கஞ்சா வணிகத்தை தடுக்க காவல்துறைக்கு சுதந்திரமும், சில கூடுதல் அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். எந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டாலும் அதற்கு அந்தப் பகுதி காவல் அதிகாரி தான் பொறுப்பேற்கச் செய்யப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதன்  மூலம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கஞ்சா ஒழிக்க வேண்டும் என பா.ம.க. கோருகிறது.

தீர்மானம் 18: ஓபிசி இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறைக்கு முடிவு கட்ட வேண்டும்!

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 27% இட ஒதுக்கீட்டை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெறுவதற்கு கிரீமிலேயர் பெரும் தடையாக உள்ளது. தகுதியும், திறமையும் உள்ளவர்களுக்கு கூட கிரீமிலேயர் என்று கூறி வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும்.

இந்தியாவில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் கிரீமிலேயர் என்ற தத்துவம் பின்பற்றப்பட வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. மண்டல் ஆணைய பரிந்துரைப்படி, மத்திய அரசின் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 1992ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பில் கிரீமிலேயர் என்ற தத்துவத்தை திணித்தது. அதன்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உயர்வருவாய் பிரிவினருக்கு 27% ஓபிசி இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது.

ஓபிசி கிரீமிலேயருக்கான வருவாய் வரம்பு கடந்த 2017&ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட ரூ.8 லட்சத்துக்குப் பிறகு கடந்த 7 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. அதேநேரத்தில் பணவீக்கம் காரணமாக குடும்ப வருவாய் அதிகரித்துள்ள நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பெரும்பான்மையினரால் 27% இட ஒதுக்கீட்டை அனுபவிக்க முடியவில்லை. கல்வியிலும், சமூக நிலையிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டியது தேவையும், மத்திய அரசின் கடமையும் ஆகும். அதற்கு கிரீமிலேயர் தத்துவம் பெரும் தடையாக இருக்கும் நிலையில், அதை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் & அது சாத்தியமாகும் வரை கிரீமிலேயர்  வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பா.ம.க. சிறப்புப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 19: நீட் விலக்குச் சட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்!

இந்தியாவில்  2017-ஆம் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கம் நிறைவேறுவதற்கு மாறாக, மருத்துவப் படிப்பு  மேலும், மேலும் வணிகமயமாகி வருகிறது.  சமூகநீதிக்கு எதிரான  நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதற்காக 2021&ஆம் ஆண்டு செப்டம்பர் 13&ஆம் தேதி சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்றப்பட்டது. அதை ஆளுனரே திருப்பி அனுப்பிவிட்ட நிலையில், 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் நாள் அதே சட்டம் மீண்டும் இயற்றி, மே மாதத் தொடக்கத்தில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. நீட் விலக்கு சட்டம் பேரவையில் இயற்றப்பட்டு 24 மாதங்கள் நிறைவடைந்து விட்டன; அந்த சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு 21 மாதங்களாகி விட்டன. ஆனால், நீட் விலக்கு சட்டத்திற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்க வில்லை.

நீட் தேர்வுக்கு முடிவு கட்டப்படாததால், அதில் மதிப்பெண் எடுக்க முடியாத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சோகமும் நீடிக்கிறது. இந்த நிலைக்கு முடிவுகட்ட தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று  பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 20 : பள்ளிகள் முதல் உயர்நீதிமன்றம் வரை & எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள மொழிவாரி மாநிலங்கள் ஒவ்வொன்றிலும், அந்த மாநிலம் சார்ந்த  மொழி தான் ஆட்சி செய்கிறது. அம்மாநிலங்களில் அதன் மொழியை புறக்கணித்து விட்டு, எதையும் செய்ய முடியாது. ஆனால், தமிழ்நாட்டில் தமிழை புறக்கணித்து விட்டு எதையும் செய்யலாம் என்ற நிலை தான் நிலவுகிறது. இதற்கெல்லாம் உச்சமாக தமிழை ஒரு பாடமாகக் கூட படிக்காமல் பட்டம்  பெற முடியும் என்ற நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. இது அன்னை தமிழுக்கு இழைக்கப்படும் அவமானம்.

தமிழன்னைக்கு இழைக்கப்படும் அவமானத்தை துடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், உலகத் தாய்மொழி நாளான 2023&ஆம் ஆண்டு பிப்ரவரி 21&ஆம் நாள் சென்னையில் தமிழன்னை சிலையுடன் தமிழைத்தேடி என்ற தலைப்பில் பயணத்தைத் தொடங்கினார். செங்கல்பட்டு, திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் வழியாக பிப்ரவரி 28&ஆம் நாள் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் பயணத்தை நிறைவு செய்தார். தமிழைக் காக்கும் நோக்கத்துடன் தமிழைத்தேடி பயணத்தை மேற்கொண்ட மருத்துவர் அய்யா அவர்களுக்கு இப்பொதுக்குழு பாராட்டு தெரிவிக்கிறது.

தமிழைத்தேடி பயணம் மேற்கொள்ளப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அன்னைத் தமிழ் சார்ந்த மருத்துவர் அய்யா அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் கோரிக்கைகளாக தொடர்கின்றன. பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழை கட்டாய பயிற்றுமொழியாக அறிவித்து சட்டம் இயற்ற வேண்டும், தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை பட்ட மேற்படிப்பு வரை நீட்டிக்க வேண்டும், தமிழைக் காக்க மொழிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழ் மொழியில் அமைக்கப்பட வேண்டும், செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்தை மேம்படுத்த வேண்டும், தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும், சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும், தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், மருத்துவம், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு  தமிழ்ப் பாட மதிப்பெண்ணையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக கோருகிறது.

தீர்மானம் 21 : ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் உடனே  தடை பெற வேண்டும்!

தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தின் வரம்புக்குள் ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகள் வராது என்று உயர்நீதிமன்றம் கடந்த நவம்பர் 9&ஆம் நாள் தீர்ப்பளித்தது. அதன்பின் 3 மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததாக தெரியவில்லை.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு விட்டதாக மாநில சட்ட அமைச்சர் ரகுபதி கூறியுள்ள போதிலும், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல்முறையீடு இதுவரை விசாரணைக்கு வரவில்லை. இடைப்பட்ட காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த காலங்களில் மொத்தமாக 100&க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் நிலையில் தான் பா.ம.க பல்வேறு போராட்டங்களை நடத்தி புதிய சட்டத்தை  பேரவையில் நிறைவேற்றச் செய்தது. அந்தச் சட்டத்தாலும் பயனில்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க ஒரே வழி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சாதகமானத் தீர்ப்பைப் பெறுவது தான். எனவே, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தின் வரம்புக்குள் ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகள் வராது என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்; உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெற வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்துகிறது.

தீர்மானம் 22: கோயம்பேடு பேருந்து நிலையத்தை சென்னையின் பெரிய பூங்காவாக மாற்ற வேண்டும்!

சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள 36 ஏக்கர் நிலம் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படவிருப்பதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. இவை உண்மையாக இருந்தால் அம்முடிவை அரசு கைவிட வேண்டும்.  கோயம்பேடு பேருந்து நிலையத்தை சென்னையின் அடையாளமாக பெரும் பூங்காவாக மாற்ற வேண்டும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தை பூங்காவாக மாற்றுவதற்கு ஏராளமான நியாயங்கள் உள்ளன.  இந்தியாவின் அனைத்து பெரு நகரங்களிலும் மக்கள் பயன்படுத்துவதற்கான பூங்காக்கள் பெருமளவில் உள்ளன. ஆனால், சென்னையில் அத்தகைய பூங்காக்கள் இல்லை. சென்னையின் பெரிய பூங்காவான செம்மொழி பூங்கா வெறும் 20 ஏக்கரிலும், அண்ணா நகர் கோபுர பூங்கா 15 ஏக்கரிலும் மட்டுமே அமைந்துள்ளன. அடையாறு தொல்காப்பியப் பூங்கா 358 ஏக்கரில் இருந்தாலும் அது மக்களின் அன்றாட பயன்பாட்டுக்கானது அல்ல. பனகல் பூங்கா, நேரு பூங்கா, திரு.வி.க. பூங்கா, மே தின பூங்கா போன்ற பல பூங்காக்கள்  மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. அதனால், சென்னையின் பசுமைப்போர்வை பரப்பு  குறைந்து விட்ட நிலையில் அதை ஈடுகட்ட புதிய பூங்காக்களை உருவாக்குவது மிகவும் அவசியமாகும். அதற்கு கோயம்பேடு பேருந்து நிலையம் சிறந்த தேர்வாகும்.

சென்னை மாநகரில் தொற்று நோய்கள் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், அதீத உடல்பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகமாகிவருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்கும் மக்களின் உடலுழைப்பு வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் பூங்காக்கள்  தேவை. எனவே, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், தனியார் பேருந்து நிலையம், சந்தைப் பூங்கா, கூடுதல் நிலம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து 66 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 23: சென்னை விமான நிலையம் &கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகளை தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்!

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட புதிய பேருந்து முனையத்தில் இருந்து சென்னையின் பிற பகுதிகளுக்கு பயணிகள் செல்ல போதிய இணைப்பு வசதி இல்லை. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளும், தனியார் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையைச் சேர்ந்த பயணிகள் வெளியூர் செல்லவும், வெளியூரிலிருந்து திரும்பவும் கிளாம்பாக்கத்தில் இருந்து தங்கள் வீடுகளுக்கு குறைந்தது  25 கி.மீ முதல் அதிகபட்சமாக 50 கி.மீ வரை பயணிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு போதிய அளவில் பொதுப்போக்குவரத்து வசதிகள் செய்யப்படாத நிலையில், ஒவ்வொரு முறையும் பயணிக்க தானி, வாடகை மகிழுந்து ஆகியவற்றுக்கு ரூ.1000 வரை செலவழிக்க வேண்டியிருக்கிறது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத சுமை என்பதில் எந்த ஐயமும் இல்லை.

கிளாம்பாக்கத்திலிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பை ஏற்படுத்தித் தருவதற்கு சிறந்த வழி விமான நிலையம் & கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்வண்டித் திட்டத்தை செயல்படுத்துவது தான். கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைப்பது என முடிவெடுக்கப்பட்ட போதே, ஏற்கனவே விமான நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ தொடர்வண்டிப் பாதையை நீட்டிக்க தீர்மானிக்கப் பட்டு அதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு விட்டன. 2021&ஆம் ஆண்டில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2024&ஆம் ஆண்டு தொடங்கிய பிறகும் கூட பணிகள் தொடங்கப்படவில்லை. அவ்வளவு ஏன்? அத்திட்டத்திற்கு  கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசு ஒப்புதல் கூட வழங்கவில்லை. உடனடியாக இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 24 : கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதி பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் அதையொட்டியுள்ள கேளம்பாக்கம் உப்பங்கழி, பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பெரும்பாக்கம் சதுப்பு நிலம், சிறுதாவூர் ஏரி மற்றும் காப்புக்காடு, நன்மங்கலம் காப்புக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெலிகன், பொரி மீன்கொத்தி, சாம்பல் கூழைக்கடா, யுரேஷியா கழுகு ஆந்தை, கோனமூக்கு உள்ளான், தட்டைவாயன் வாத்து, நாமத்தலை வாத்து,  ஊசிவால் வாத்து உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வகைகளை சேர்ந்த லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணித்து வந்து செல்கின்றன. இந்தப் பகுதிகளை சிறப்பாக பராமரித்து பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு.

ஆனால், பறவைகள் வந்து செல்லும் பகுதிகளில் ஏற்படுத்தபடும் ஒலிமாசு, இரவு நேரக் கொண்டாட்டங்கள், இரைச்சல் மிகுந்த இசை நிகழ்ச்சிகள், பட்டாசு வெடிக்கும் நிகழ்வுகள் , கோவளம் பகுதியில் நடத்தப்படும் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை போன்றவற்றால் வெளிநாட்டு பறவைகள் வலசை வருவது பாதிக்கப்படும். எனவே, பறவைகளை பாதுகாக்கும் வகையில், கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதி பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்கவும், கிழக்குக் கடற்கடை சாலை பகுதியில் மேற்கொள்ளப்படும் ஹெலிகாப்டர் சுற்றுலா, அமைதியையும், சூழலையும் கெடுக்கும் கொண்டாட்டங்கள், ஒலிமாசுவை  ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கவும் தமிழ்நாடு அரசு  நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று பா.ம.க. புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கோருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Special General Council meet 2024


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->