பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை.. சக மாணவர்கள் செய்த செயலால் அதிர்ந்த ஈரோடு!
Plus-2 student beaten to death Erode shaken by the actions of fellow students
மாணவிகளுடன் பேசியதால் பிளஸ்-2 மாணவரை அடித்துக்கொலை செய்த சக மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகரை சேர்ந்த சிவா சத்யா தம்பதியின் மகன் ஆதித்யா.17 வயதான இவர் குமலன்குட்டை அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை ஆதித்யா பள்ளிக்கூடத்துக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு புறப்பட்டு சென்றார் ,ஆனால் அவர் பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லை.
மாலையில் பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள பகுதியில் சீருடை அணியாமல் சாதாரண உடையில் ஆதித்யா மயங்கி நிலையில் கிடந்தவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆதித்யா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ஆதித்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு வந்து தங்களது மகனை அடித்துக்கொலை செய்த சக மாணவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்து கதறி அழுதனர்.
மேலும், கைது செய்யும் வரை மகனின் உடலை பெறமாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தஅவர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி அழுதுகொண்டே அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். போலீஸ் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் சென்றதும் அவர்களை போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் போலீஸ் நிலையத்துக்கு வரவேண்டும் என்றனர்.
இதையடுத்து ஈரோடு வீரப்பன்சத்திரம் கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் காரணமாக ஆதித்யா சக மாணவர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.
மேலும் ஆதித்யாவிடம் அதே பள்ளிக்கூடத்தில் படிக்கும் 2 மாணவர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தங்களது வகுப்பில் படிக்கும் மாணவிகளுடன் பேசக்கூடாது என்று மிரட்டி தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த மாணவர்கள் தான் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள சந்தில் வைத்து ஆதித்யாவை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ஆதித்யா உயிரிழந்தது போலீசார் விசாரணையில் உறுதியானது.
இதைத்தொடர்ந்து போலீசார் மாணவர்கள் 2 பேரை கைது செய்தனர். இந்த கொலையில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று கைதானவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆதித்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
English Summary
Plus-2 student beaten to death Erode shaken by the actions of fellow students