பழனியில் பயங்கரம்! கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கார்...! - கைக்குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த கோரச் சம்பவம்...!
Palani car lost control and fell ditch horrific incident which 3 people including infant died
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நலகம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை (33), தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி, நேற்று தனது மனைவி சொப்னா (24), உறவினர்கள் மஞ்சுளா (38), பாஸ்கரன் (26), வனிதா (44) மற்றும் 7 மாத குழந்தை அணியாஸ்ரீ ஆகியோருடன் காரில் பயணம் மேற்கொண்டார்.
இந்த வாகனத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் (28) இயக்கினார்.கரூர், திண்டுக்கல் வழியாக பயணம் செய்த அவர்கள், நேற்று காலை ஒட்டன்சத்திரம் வந்தடைந்து, அங்கிருந்து திண்டுக்கல்–பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் பழனி நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது சத்திரப்பட்டி சுங்கச்சாவடி அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் வேகமாக சாலையோர ஓடையில் பாய்ந்து கவிழ்ந்தது.இந்த கோர விபத்தில், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய மஞ்சுளா (38) மற்றும் குழந்தை அணியாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் அண்ணாதுரை, சொப்னா, பாஸ்கரன், வனிதா மற்றும் டிரைவர் ஹேமச்சந்திரன் ஆகிய ஐந்து பேர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சத்திரப்பட்டி காவலர்கள் உடனடியாக விரைந்து வந்து, பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த பாஸ்கரன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து, உயிரிழந்த மஞ்சுளா மற்றும் குழந்தை அணியாஸ்ரீ ஆகியோரின் உடல்கள் கைப்பற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. இந்த விபத்து குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணங்களை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
English Summary
Palani car lost control and fell ditch horrific incident which 3 people including infant died