எப்போ வாயை திறக்க போறீங்க?! சரியான தருணம் பார்த்து ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்கும் ஓபிஎஸ்!  - Seithipunal
Seithipunal


ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  ஆனால், டாஸ்மாக் கடைகள் பற்றி வாய் திறக்கவில்லை என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "27-12-2021 அன்று 605 ஆக இருந்த கொரோனா தொற்று, மூன்றாவது அலை வேகமாக பரவத் தொடங்கியதையடுத்து 03-01-2022 அன்று 1,728 ஆக அதிகரித்ததன் விளைவாக, கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், இரவு 10-00 மணி முதல் காலை 5-00 மணி வரை ஊரடங்கு, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தல், 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என பல புதிய கட்டுப்பாடுகள் 05-01-2022 அன்று விதிக்கப்பட்டன.  ஆனால், டாஸ்மாக் கடைகள் பற்றி வாய் திறக்கவில்லை .  

மேற்படி புதியக் கட்டுப்பாடுகள் அறிவித்த 05-01-2022 அன்று 4,862 - ஆக இருந்த கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 08-01-2022 நிலவரப்படி 10,978 ஆக உயர்ந்துள்ளது. மூன்றே நாட்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும்  மேலாக உயர்ந்துள்ளது. இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம் மதுக்கடைகள் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதித்து இருப்பதுதான். 

07-05-2020 அன்று அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 580 என்றிருந்த நிலையில் மதுக் கடைகள் திறக்கப்பட்ட போது, அதனை எதிர்த்து தி.மு.க. சார்பில் அவரவர்கள் வீடு முன்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சரும் தன் வீட்டின் முன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார். 

ஆனால் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 14-06-2021 அன்று 12,772 பேர் ஒரு நாளைக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டபோது தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10-00 மணி முதல் மாலை 5-00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று தமிழ்நாடு  முதலமைச்சர்  அறிவித்தார்.
 
இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 23-06-2021 அன்று கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்குப் பதில் அளித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் 07-05-2020 அன்று மதுபானக் கடைகள் திறந்தபோது கொரோனாத் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.1 சதவீதம் என்றும், 08-05-2020 அன்று 4.3 சதவீதம் என்றும், இந்த சதவீதம் அதிகரித்துக் கொண்டே சென்றது என்றும், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 14-06-2021 அன்று மதுக்கடைகள் திறக்கப்பட்ட போது 27 மாவட்டங்களில் 5.4 சதவீதம் தான் தொற்று இருந்ததாகவும், 23-06-2021 அன்று 2.8 - சதவீதமாக குறைந்துவிட்டதாகவும், பாதிப்பு இறங்குமுகத்தில் இருந்ததாகவும், 5 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடிய மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க முதலமைச்சர் அவர்கள் அனுமதி அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார். 

அதாவது, பரிசோதனை செய்யப்பட்டவர்களில் எத்தனை சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க வேண்டுமேயன்றி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வைத்து மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்பது தி.மு.க.வின் வாதமாக அப்போது இருந்தது.
 
நேற்று தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையின்படி பார்த்தால், 1,39,253 பேரின் மாதிரிகளை சோதனை செய்ததில் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 8 சதவீதம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். தி.மு.க.வினுடைய வாதத்தின்படி, எட்டு சதவீத பாதிப்பு உள்ள இந்நிலையில் மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும். 

ஆனால், மதுக்கடைகள் தமிழ்நாடு முழுவதும் திறந்து வைக்கப்பட்டு இருக்கின்றன. கொரோனா தொற்று வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்ற தருணத்தில் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசிற்கு அ.தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஒரு பக்கம் பள்ளிகள், கல்லூரிகளை மூடவும், வழிபாட்டுத்தலங்களை வாரத்தில் மூன்று நாட்கள் மூடவும் உத்தரவிட்டுவிட்டு, மறுபக்கம் மதுக்கடைகளை திறந்து வைப்பது என்பது கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த உதவாது. மாறாக, தொற்றினை அதிகரிக்க வழிவகுக்கும். 

கடந்த ஐந்து நாட்களாக எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் பார்த்தால், தற்போதுள்ள எட்டு சதவீத பாதிப்பு என்பது ஒரு வாரத்தில் இரட்டிப்பாகும் சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது. பிப்ரவரி மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொடும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஏனெனில் அந்த அளவுக்கு கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. உச்சத்தை ஓரளவுக்கு தளர்த்த வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவிடுவதுதான் உத்தமமாக இருக்கும். 

அதை இந்த அரசு செய்ய வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கிறார்கள். 
எனவே, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கொரோனா மூன்றாவது அலையை ஓரளவுக்காவது தடுக்கும் வகையில், கொரோனா பரவலின் தாக்கம் 5 விழுக்காட்டிற்குக் கீழ் செல்லும் வரையிலாவது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட உத்தரவிட வேண்டுமென்று முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Statement about when tasmac closed


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->