'அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும், ஏன் காலதாமதம் ஏற்படுகிறது': சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி..!
Madras High Court questions why there are delays only in cases against politicians
முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு புகார்கள் மீது, விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏன் அரசியல்வாதிகள் மீதான வழக்குகளில் மட்டும் விசாரணை ஏன் தாமதமாகிறது என காவல் துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னதாக அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சி துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்த போது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் சாலைப் பணிகள் மேற்கொள்ளவதற்காக உறவினர்கள், நெருக்கமானவர்களுக்கு, 'டெண்டர்' வழங்கியதில், 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தி.மு.க., தரப்பில், அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார்.

குறித்த புகாரையடுத்து வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வேலுமணி மனு தாக்கல் செய்திருந்தார்.
இதில் வேலுமணிக்கு எதிரான வழக்கை மட்டும், உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதன்பின் ஆட்சி மாறியது. இதனையடுத்து, இவ்வழக்கில் உள்நோக்குடன் புலன் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது எனக் கூறி, வழக்கை ரத்து செய்ய கோரி, இதில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் மனு தாக்கல் செய்தன. அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன், ஆறு வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

குறித்த உத்தரவின்படி, நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, அறப்போர் இயக்கம் தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன், வந்தது. வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, 'அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும், ஏன் இவ்வளவு காலதாமதம் ஏற்படுகிறது' என, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அரசு நிதி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில், குறிப்பாக நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில், காவல் துறை பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளதோடு, அடுத்து விசாரணையை, வரும் 19-ஆம் தேதிக்கு க்கு ஒத்திவைத்துள்ளார்.
English Summary
Madras High Court questions why there are delays only in cases against politicians