காஞ்சியில் தொடரும் வடகலை - தென்கலை பிரிவினர் மோதல்: உரிமையியல் நீதிமன்றத்தை நாடவும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி..!
Madras High Court orders Vadakalai and Thenkalai factions to approach civil court for clash case
108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் உள்ள, சின்னகாஞ்சி விளக்கொளி பெருமாள் எனும் தீபப்பிரகாசர் கோயில் விழாக்களின் போது, கோயிலுக்கு வெளியில் தென்கலை மந்திரம் பாடவும், தென்கலை வாழி திருநாமம் பாடவும் அனுமதி மறுத்த கோயில் செயல் அலுவலர் உத்தரவை எதிர்த்து, தென்கலை பிரிவைச் சேர்ந்த ஸ்ரீரங்காச்சாரி, ஸ்ரீனிவாசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, கோயிலில் தென்கலை மந்திரம் பாட அனுமதியளித்து 1915-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட முன்சீப் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதனை தொடர்ந்து, 1918-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உரிமையியல் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உயர் நீதிமன்றத்தை பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த வழக்கு குறித்த தீர்ப்பை அமல்படுத்தக் கோரி சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த கோயில் விழாக்களின் போது வடகலை - தென்கலை பிரிவினர் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்ததால், விழாக்கள் அமைதியாக நடக்க, கோயில் செயல் அலுவலர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக, நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், வடகலை, தென்கலை இரண்டும் ஒரு பூ காம்பின் இரு இதழ்கள் போன்றது. இரு பிரிவுகளும் பெருமாளுக்கு சொந்தமானவை என்றும் கூறியுள்ளார். இரு பிரிவுகளின் குருமார்களும் பெருமாளின் பாத கமலத்தில் இளைப்பாறும் நிலையில், அவர்களின் சீடர்கள் குருக்களின் பெயரால் மோதல்களை தவிர்த்து, ஒன்று சேர்ந்து குருக்களின் பாதைக்கு கவுரவம் அளித்து நம்பிக்கை பாதையில் நடைபோட வேண்டும் என இரு பிரிவினருக்கும் நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த வைணவ சமயத்தில் தென்கலை மற்றும் வடகலை பிரச்னையானது இன்னுமே முடிவுக்கு வராத தொடர் பிரச்சினையாக உள்ளது. இந்நிலையில், காஞ்சி தேவராஜ சாமி கோயிலில் பக்தர் தானமாக அளித்த வெள்ளிக் கவச சங்கு சக்கரத்தில் வடகலை நாமத்தை பொறிக்க வேண்டும் என வழக்கு தொடர்பில் உரிமையியல் நீதிமன்றத்தை நாட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவிவுறுத்தியுள்ளார்.
English Summary
Madras High Court orders Vadakalai and Thenkalai factions to approach civil court for clash case