இன்ஸ்பெக்டரின் ஊழல் கதை அம்பலம்...! லஞ்ச வழக்கில் சிக்கிய சுகுமாறனை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தும் சி.பி.சி.ஐ.டி...! - Seithipunal
Seithipunal


தஞ்சையில் தனியார் மருத்துவமனைப் பங்குதாரர்களுக்கு இடையிலான பிரச்சினையில், ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் புகாரில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் சுகுமாறனிடம், ஒருநாள் காவலில் வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இரண்டு நாட்கள் விசாரிக்க அனுமதி கோரப்பட்ட நிலையில், ஒருநாள் மட்டுமே காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.தஞ்சையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில், பங்குதாரர்களுக்கு இடையே உரிமை தொடர்பான பிரச்சினை நீடித்து வந்தது.

இதுகுறித்து இரு தரப்பினரும் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்திலும், மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர்.இந்த விவகாரத்தில், மருத்துவமனையின் நிர்வாகத் தலைவர் ஆர்.எம். பாஸ்கரன், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, வழக்கின் விசாரணை தொடர்பாகக் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மருத்துவமனை நிர்வாக இயக்குநர் சரவணன், தமிழகக் காவல்துறைத் தலைவரிடம் அளித்த புகாரில், பங்குதாரர்களுக்கு இடையிலான பிரச்சினையில் காவலர்கள் உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தங்களை மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், இந்த வழக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.இதைத்தொடர்ந்து, வழக்கின் விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. பின்னர், நிர்வாக இயக்குநர் சரவணனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, பங்குதாரர்களுக்கு இடையிலான பிரச்சினையில் காவலர்கள் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டதாகவும், ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து, தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா நகரில் உள்ள மாவட்டக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுகுமாறனின் வீட்டில் கடந்த 9-ஆம் தேதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து, சுகுமாறன் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்டபோது நெஞ்சுவலி ஏற்பட்டதாக அவர் தெரிவித்ததால், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, கடந்த 10-ஆம் தேதி மருத்துவமனைக்குச் சென்ற குற்றவியல் நீதித்துறை நடுவர், சுகுமாறனை விசாரித்து நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.தொடர்ந்து, காவல் ஆய்வாளர் சுகுமாறனைப் பணியிடைநீக்கம் செய்து தஞ்சை சரகக் காவல்துறைத் துணைத் தலைவர் ஜியாவுல்ஹக் உத்தரவிட்டார்.இதன்பிறகு, குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரிக்கும் வழக்குகளை விசாரிக்கும் திருவையாறு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சுகுமாறன் பிணை கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை கடந்த 16-ஆம் தேதி விசாரித்த நீதிபதி ஆக்னஸ் ஜெபகிருபா தள்ளுபடி செய்தார்.இதையடுத்து, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகுமாறன், தஞ்சாவூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில், சுகுமாறன் நேற்று திருவையாறு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த நீதிபதி ஆக்னஸ் ஜெபகிருபா, காவல் ஆய்வாளர் சுகுமாறனை ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதனால், ரூ.5 கோடி லஞ்சப் புகார் தொடர்பாக அவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

inspector corruption story big one Sukumaran who caught bribery case is taken into custody day and questioned by CBCID


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->