முற்றிலும் தகர்ந்துபோன நம்பிக்கை! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் கண்டனம்!! - Seithipunal
Seithipunal


இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " நாட்டிலுள்ள சிறுபான்மையினர் மத்தியில் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் லக்னோ நீதிமன்றம் இன்று அளித்திருக்கின்ற தீர்ப்பு.

பாபரி மஸ்ஜித் தொடர்பான முக்கிய வழக்குகள் இரண்டு. அதில் ஒன்று, பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது! அந்த வழக்கில் அநியாயத் தீர்ப்பெழுதி சிறுபான்மை மக்களின் நெஞ்சில் சம்மட்டியை இறக்கியது உச்ச நீதிமன்றம். நீதிபதிகளின் கையெழுத்து இல்லாமலேயே வெளியான தீர்ப்பு அது!

இன்னொரு முக்கிய வழக்கான பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கும் 28 ஆண்டுகளாக நடந்து வந்தது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார், அசோக் சிங்கால் உள்ளிட்ட 32 பேர் பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என விசாரணை அமைப்புகள் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கின்றன.  

இந்த நிலையில், உ.பி. மாநிலம் லக்னோ, சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் அத்வானி, ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோரை விடுதலை செய்து தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம்.

இது அதிர்ச்சியைத் தருகிறதென்றால், ""பாபரி மஸ்ஜித் இடிப்பு என்பது திட்டமிட்ட சதியல்ல; சந்தர்ப்ப சூழலால் நிகழ்ந்தது'' என தீர்ப்பில் நீதிமன்றம் கூறியிருப்பது பேரதிர்ச்சியைத் தருகிறது. சி.பி.ஐ.தான் மத்திய அரசின் கைப்பாவை என்ற விமர்சனத்திற்கு ஆளான ஒரு துறை. இப்போது நீதித்துறை கூடவா என நாட்டு மக்கள் எண்ணும் வகையில்தான் இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது.

அயோத்தியில் பாபரி மஸ்ஜித்தை இடித்து விட்டு அங்கே ராமர் கோவிலைக் கட்ட வேண்டும் என்று அத்வானி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்கள் பிரச்சாரம் செய்தது, அதற்கென ராமஜென்ம பூமி இயக்கம் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் அந்த நோக்கத்துடன் ரத யாத்திரை சென்றது. இவை லக்னோ நீதிமன்றத்திற்கு தெரியாத ஒன்றல்ல!

1992, டிச. 6 அன்று பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது - மேடையில் நின்றபடி மஸ்ஜித் இடிப்பை ஊக்கப்படுத்தி கரசேவகர்களை வேகப்படுத்தும் வகையில் அத்வானி உள்ளிட்டோர் பேசியது, பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நிலையில், முரளி மனோகர் ஜோஷியின் தோளில் ஏறி உமா பாரதி ஆனந்தக் கூத்தாடியது என இவற்றையெல்லாம் வெளிநாட்டு செய்தி ஊடகமான பி.பி.சி. வெளியிட்டதே, அவை பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு எதிரான ஆவணங்கள் இல்லையா? இது சந்தர்ப்ப சூழலில் நடந்த நிகழ்வுதானா? உண்மையை நீதிமன்றமே மறைக்கலாமா? குற்றவாளிகளுக்குத் துணை போகலாமா?

பாபரி மஸ்ஜித்தை இடிக்க ஒத்திகை நடத்தப்படவில்லையா? டிசம்பர் 6, 1992க்கு முன் இரண்டு முறை இடிப்புக்கான முயற்சி நடக்கவில்லையா?

பாபரி மஸ்ஜித்தை இடிக்க கரசேவகர்களை தூண்டிவிட்டு சதி செய்தார்கள் என்பதுதானே அத்வானி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு. அதற்காகத்தானே ஒரு நாள் சிறை தண்டனையை நீதிமன்றம் அத்வானிக்கு அளித்திருந்தது. 

பாபரி மஸ்ஜித் இடிப்பு கிரிமினல் குற்றம் என உச்ச நீதிமன்றம் சொன்னதே... எதன் அடிப்படையில்? பாபரி மஸ்ஜித் திட்டமிட்டு இடிக்கப்பட்டது என லிபரஹான் கமிஷன் தெளிவாகச் சொன்னதே அது லக்னோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் யாதவிற்கு தெரியாதா?

""பாபரி மஸ்ஜிதை இடிக்கத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரத்தை சி.பி.ஐ. வைக்கவில்லை. மஸ்ஜிதை இடித்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் உரை நிகழ்த்தி தூண்டி விட்டனர் என்பதற்கு அவர்களுக்கு எதிரான ஒலிப்பதிவு தெளிவானதாக இல்லை. பாபரி மஸ்ஜிதை சமூக விரோதிகள் இடித்தார்கள். அவர்களைத் தடுக்கவே குற்றம்சாட்டப்பட்டவர்கள் முயற்சித்ததாக தெரிகிறது. சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சமர்ப்பித்த காணொளிக் காட்சிகளின் உண்மைத்தன்மை நிரூபிக்கப்படவில்லை'' என்றெல்லாம் கூறி குற்றம்சாட்டப்பட்டவர்களை நீதிபதி விடுவித்திருப்பது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது.

உலகமே சாட்சியாக இருக்கும் ஒரு வழக்கில் லக்னோ சி.பி.ஐ. நீதிமன்றம் வழங்கியிருக்கின்ற தீர்ப்பு நீதித்துறையையே கேலி செய்வதாகவே உள்ளது. பாபரி மஸ்ஜித் வழக்கில் இரண்டாவது முறையாக ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது. 

நீதித்துறை மீது உள்ளது போலவே சி.பி.ஐ. மீதும் சிறுபான்மையினரின் நம்பிக்கை முற்றிலும் தகர்ந்து போயிருக்கிறது. வலுவான ஆதாரங்களை சி.பி.ஐ. வலுவற்றதாக ஆக்கி குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. 

குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தர சி.பி.ஐ. எண்ணுமானால் லக்னோ நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அது மேல்முறையீடு செய்து தனது நேர்மையை நிரூபிக்க வேண்டும். லக்னோ நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதித்துறையின் மீதான சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை முற்றிலும் தகர்த்தெறிந்துள்ளது " என்று கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian thavheeth jamath Leader Condemn about Babar Masque Demolish case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->