எங்களுக்கு போராட்டம் நடத்த உரிமை இல்லையா? சென்னையில் மருத்துவமனை பணியாளர்கள் ஆவேசம்..!
Hospital staff expressed outrage asking if they did not have the right to stage a protest
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் 3,400-க்கும் மேற்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் .உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில், கைது செய்யப்பட்டனர்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில், உரிமை இயக்கத்தின் மாநில தலைவர் கு.பாரதி தலைமையில் நடந்த போராட்டத்தில் மாநில முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், போராட்டத்துக்கு அனுமதி இல்லாததால், போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்களை போலீசார் கைது செய்ய தொடங்கி போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதோடு, தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து, பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அனைத்து பணியாளர்களையும் போலீஸார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்து வாகனங்களில் ஏற்றி சென்று சமூக நலக்கூடங்களில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் சில பெண் பணியாளர்கள் மயக்கமடைந்ததால், அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் மேம்பாட்டு சங்கத்தின் மாநில தலைவர் கே.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளதாவது;
''உண்ணாவிரத போராட்டம் நடத்திய எங்களை போலீசார் கைது செய்துள்ளனர். எங்களுக்கு போராட்டம் நடத்த உரிமை இல்லையா? கழிப்பறைக்கு சென்ற பெண் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து கொண்டிருந்தவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். பல இடங்களில் பணியாளர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத் துறை அமைச்சர், செயலர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த மாதம் 10-ஆம் தேதி வரை அவகாசம் கேட்டுள்ளார். அப்போது கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்,'' என்று குறிப்பிட்டார்.
English Summary
Hospital staff expressed outrage asking if they did not have the right to stage a protest