பரிசோதனையில் நேர்ந்த பயங்கரம்! ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில் மாணவர் உயிரிழப்பு...! - செங்கல்பட்டில் நள்ளிரவு பரபரப்பு!
Horror during experiment Student dies rocket launcher explosion Midnight excitement Chengalpattu
செங்கல்பட்டு மாவட்டத்தின் சிங்கப்பெருமாள் கோவில் அருகிலுள்ள அனுமந்தபுரம் கிராமம், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சுடும் மற்றும் வெடிகுண்டு பயிற்சிகளுக்கான முக்கிய தளமாகப் பரவலாக அறியப்படுகிறது. இந்தப் பகுதியில் மத்திய, மாநில காவலர்கள், துணை ராணுவத்தினர், தேசிய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் துப்பாக்கி சுடுதல், ராக்கெட் லாஞ்சர் இயக்குதல், வெடிகுண்டு வீச்சு போன்ற தீவிர பயிற்சிகளில் அடிக்கடி ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பயிற்சிகளின் பின்னர் வெடித்தும், வெடிக்காமல் மீதமிருந்த கையெறி குண்டுகள் மற்றும் ராக்கெட் சாதனங்கள் அருகிலுள்ள வனப்பகுதிகளில் சிதறிக் கிடப்பது வழக்கமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பொத்தேரியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் 4ஆம் ஆண்டு பொறியியல் படித்து வந்த மாணவர்கள்,பெங்களூருவைச் சேர்ந்த ஹீமான்யூ யாதவ் (21), ஐதராபாத்தைச் சேர்ந்த விஷால் (21), உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்யன் சர்மா (21), ஜம்முவைச் சேர்ந்த கிருஷ்ணா (21), டெல்லியைச் சேர்ந்த நிக்காஷ் (21), வீராட் (23) இவர்கள் ஆறு பேரும் நேற்று மூன்று மோட்டார் சைக்கிள்களில் அனுமந்தபுரம் மலைப்பகுதியை நோக்கிச் சென்றுள்ளனர்.
மலை உச்சியை அடைந்த அவர்கள், அங்கு வெடிக்காமல் கிடந்த ஆபத்தான ராக்கெட் சாதனத்தை கவனிக்காமல் அணுகியதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் ஒருவன் அதனை எட்டி உதைத்தவுடன், அது அருகிலிருந்த பாறையில் மோதியவுடன் அதிர்ச்சியூட்டும் சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த திடீர் வெடிப்பில் பலத்த காயமடைந்த ஹீமான்யூ யாதவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மாணவர்கள் விஷால், ஆர்யன் சர்மா, கிருஷ்ணா, நிக்காஷ் ஆகியோர் கடுமையான காயங்களுடன் உயிர் போராட்டத்தில் தத்தளித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சிங்கப்பெருமாள் கோவில் காவலர்கள் உடனடியாக விரைந்து வந்து, உயிரிழந்த மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.இந்த வெடிப்பு சம்பவத்தில் மாணவன் எட்டி உதைத்தது ராக்கெட் லாஞ்சரா அல்லது வேறு வெடிகுண்டா என்பது குறித்து உறுதி செய்ய வெடிகுண்டு நிபுணர்கள் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கல்லூரி மாணவர்கள் எந்த நோக்கத்தில் மலை உச்சியை நோக்கிச் சென்றார்கள் என்பதையும் காவலர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Horror during experiment Student dies rocket launcher explosion Midnight excitement Chengalpattu