கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி அச்சம்! - தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு!
Fears African swine fever spreading Kerala Vigilance Tamil Nadu borders
கேரள மாநிலத்தின் கோட்டயம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம்-கேரள எல்லையோரங்களில் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.கோவையில் மட்டும் 12 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, 36 கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

முள்ளி, கோபனாரி உள்ளிட்ட எல்லைச் சோதனை மையங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.கேரளாவிலிருந்து பன்றிகள், பன்றி இறைச்சி, தீவனம் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், இதர வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.கோவை மாவட்டத்தில் தற்போது 2,200க்கும் மேற்பட்ட பன்றிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பன்றிகளுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், பன்றிகளில் காய்ச்சல், சோர்வு, தோல் அரிப்பு, அல்லது திடீர் இறப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.நிலையிலாக, கோவை மாவட்டத்தில் இதுவரை ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பதிவாகவில்லை எனவும், பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
இதேபோல், நீலகிரி மாவட்டத்திலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கூடலூர், நாடுகாணி, தாளூர், பாட்டவயல், கக்கநல்லா உள்ளிட்ட 8 சோதனை சாவடிகளில் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.பன்றி மற்றும் அதன் இறைச்சி ஏற்றிய வாகனங்கள் மாவட்ட எல்லையை கடக்க அனுமதிக்கப்படுவதில்லை என மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
English Summary
Fears African swine fever spreading Kerala Vigilance Tamil Nadu borders