தூத்துக்குடியில் தேர்தல் அதிரடி சோதனை...! - ரூ.83 லட்சம் ரொக்கம் பறிமுதல்...!
Election raid Thoothukudi 83 lakh cash seized
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாகவும் தீவிரமாகவும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் மாவட்டம் முழுவதும் நடத்திய தீவிர சோதனைகளில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்கள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,"ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.83 லட்சத்து 3 ஆயிரத்து 266 ரொக்கத் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், வாக்காளர்களை கவரும் நோக்கில் விநியோகிக்க கொண்டு செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ.13 லட்சத்து 71 ஆயிரத்து 671 மதிப்பிலான இலவச பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், விதிமுறைகளை மீறி எடுத்துச் செல்லப்பட்டதாகக் கருதப்படும் ரூ.5 லட்சத்து 44 ஆயிரத்து 499 மதிப்பிலான மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறி ஆவணமின்றி அதிகளவு பணம், பரிசுப் பொருட்கள் அல்லது சட்டவிரோத பொருட்களை கொண்டு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களுடைய பணப் பரிவர்த்தனைகள் மற்றும் எடுத்துச் செல்லும் பொருட்களுக்கு உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்றும் காவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
English Summary
Election raid Thoothukudi 83 lakh cash seized