“எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார்”.. தேமுதிக கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு! திமுக கூட்டணியில் சேர தயாராகும் தேமுதிக? - Seithipunal
Seithipunal


சென்னை தியாகராய நகரில் இன்று நடைபெற்ற தேமுதிக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,“எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர்–ஜெயலலிதா காலத்திலும் கூட ராஜ்யசபா எம்.பி. தொடர்பான ஒப்பந்தங்களில் தேதி குறிப்பிடுவதில்லை என்று சொன்னார். அதேபோலத்தான் எங்களுடனும் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திட்டார். ஆனால், ராஜ்யசபா எம்.பி. சீட் தொடர்பாக தெளிவாகவே பேசிவிட்டு ஒப்பந்தம் செய்தோம். முன்னாள் முதலமைச்சர் என்ற மாண்பின் காரணமாக ஆதாரங்களை வெளியிடவில்லை. அதனால்தான் நாம் ஏமாந்துவிட்டோம்” என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும்,“பெரிய மனிதர் என நம்பி நம்பி ஏமாந்தது போதும். இனிமேல் எங்களை ஏமாற்ற முடியாது. எடப்பாடி பழனிசாமி நம்மை முதுகில் குத்திவிட்டார். அவர்களின் சுற்றுப்பயணத்தில் கூட்டம் கூடுவது எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும் – பணம், மதுவைக் கொடுத்து கூட்டம் நடத்துகிறார்கள். ஆனால் நமது கூட்டத்திற்கு மக்கள் கேப்டனின் மீதான அன்பால் தானாகவே திரண்டு வருகிறார்கள்” எனக் கடுமையாக தாக்கினார்.

அதோடு,“வரும் தேர்தலில் தேமுதிகவை தேடி அனைவரும் வருவார்கள். இனி கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமெனில், எத்தனை இடம் தருகிறார்கள் என்பதைக் எழுத்தில் கொடுத்த பிறகு தான் பேசுவோம்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

 குறிப்பிடத்தக்கது என்னவென்றால், ஜூன் 19 அன்று நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில், அதிமுகவிடம் இருந்து எப்படியாவது ஒரு இடம் கிடைக்க வேண்டும் என தேமுதிக முயற்சித்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி, “இப்போது சீட் இல்லை, அடுத்த தேர்தலில் தருகிறோம்” என்று கூறியிருந்தார். பின்னர், 2026 தேர்தலில் சீட் தருவோம் என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் தேமுதிக தரப்பு கடும் அதிருப்தியில் இருந்தது.

இந்தச் சூழலில் தான், இன்று நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமியை நேரடியாக குறிவைத்து கடுமையாக விமர்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palaniswami stabbed him in the back Premalatha Vijayakanth speech at the DMDK meeting Is DMDK preparing to join the DMK alliance


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->