விஜய் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்! அவ்ளோதான் லிமிட்டு! - செய்தியாளர்களிடம் கோவப்பட்ட பிரேமலதா விஜயகாந்த்!
Donot ask me about Vijay Premalatha Vijayakanth gets angry with reporters
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தேர்தல் முறையில் நடைபெறும் தவறுகள் குறித்து வெளிப்படையாகவே கடும் விமர்சனம் செய்தார். குறிப்பாக, “பீகாரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் வாக்குத் திருட்டு நடக்கிறது” என்ற அவரது கூற்று, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது, பிரேமலதா,“தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் வாக்குத் திருட்டு நடக்கிறது. தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம், ஓட்டுக்கு காசு கொடுப்பது, கள்ள ஓட்டு போடுவது—இவை எல்லாம் கண்கூடாக நடக்கிறது. ஆனால் இதைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் இன்று பாஜகவின் பொம்மையாக செயல்படுகிறது என்று சொல்வது தவறு இல்லை. உண்மையில் அது எப்போதுமே பொம்மையாகத்தான் இருந்து வருகிறது” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும் அவர், “வாக்குக்கு காசு கொடுக்கும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். தேர்தல் ஆணையமே உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், நேர்மையான தேர்தல் என்ற அர்த்தமே மிச்சம் இருக்காது” என வலியுறுத்தினார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து கேட்டபோது, பிரேமலதா,“மக்களிடையே எங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இன்னும் 9 மாதங்கள் காலம் உள்ளது. சரியான நேரத்தில் நாங்கள் எங்கள் தேர்தல் திட்டத்தை அறிவிப்போம்” என்றார். கூட்டணி தொடர்பான கேள்விக்கு, “கூட்டணி பற்றி இப்போது எதையும் சொல்ல மாட்டேன். நாங்கள் எங்கள் வேலையைச் செய்து கொண்டு இருக்கிறோம். நீங்கள் உங்களால் கற்பனை செய்து கேட்கிறீர்கள் என்றால் அதற்கு நான் பதில் சொல்ல முடியாது” என்று எச்சரிக்கையாக பதிலளித்தார்.
அதே சமயம், தொடர்ந்து கூட்டணி, விஜய் குறித்து கேள்விகள் எழுப்பிய செய்தியாளர்களிடம் பிரேமலதா கடும் அதிருப்தி தெரிவித்தார்.
“நான் தூத்துக்குடிக்கு வந்திருக்கிறேன். இங்குள்ள உப்பளத் தொழிலாளர்கள், சிறு குறு தொழில்கள், கப்பல் தளம் அமைப்பால் பாதிக்கப்படும் மக்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள்—இவைகளை ஏன் கேட்கவில்லை? நீங்கள் எப்போதும் கூட்டணி, விஜய் பற்றியே கேட்கிறீர்கள். பத்திரிகையாளர்கள் ஜனநாயகத்தின் மூன்றாவது தூண் என்று சொல்கிறோம். ஆனால் மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வராமல், ஒரே கேள்வியை மட்டும் கேட்கும் நிலைமை ஏன்?” என்று நேரடியாக கேள்வி எழுப்பினார்.
முடிவில் அவர், “அரசியலும், ஆட்சியும் மக்களுக்காகத்தான். மக்கள் நலமாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தி, கோபமாகச் சொல்லிவிட்டு உடனடியாக வெளியேறினார்.
English Summary
Donot ask me about Vijay Premalatha Vijayakanth gets angry with reporters