தீப்பெட்டி கேட்டதில் தொடங்கிய தகராறு… அரிவாள் தாக்குதலில் உயிரிழந்த வியாபாரி...! நடந்தது என்ன...?
dispute that started over matchbox merchant died sickle attack What happened
தஞ்சை அருகே புதுப்பட்டினம் யாகப்பா சாவடி பகுதியைச் சேர்ந்த கமாலுதீனின் மகன் சிராஜுதீன் (34) அந்தப் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று இரவு, அம்மாகுளம் பாலம் – நெய்வாய்க்கால் பகுதியில் அவர் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரத்தில், அம்மாகுளம் கீழவஸ்தாசாவடி மேலத்தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பிரதீப் (29) தனது நண்பர்களுடன் மது போதையில் நெய்வாய்க்கால் பகுதிக்கு வந்துள்ளார்.
அங்கு மது அருந்திக் கொண்டிருந்த சிராஜுதீன் மற்றும் அவரது நண்பர்களிடம் தீப்பெட்டி கேட்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இந்த வாய்த்தகராறு நொடிகளில் வன்முறையாக மாற, ஆத்திரமடைந்த பிரதீப், தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து சிராஜுதீனை சரமாரியாக வெட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த சிராஜுதீன் உடனடியாக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த சம்பவம் குறித்து சிராஜுதீனின் தந்தை கமாலுதீன் அளித்த புகாரின் பேரில், அம்மாப்பேட்டை காவலர்கள் பிரதீப்புக்கு எதிராக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் பிரதீப் பாபநாசம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாபநாசம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிராஜுதீன், சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, அம்மாப்பேட்டை காவலர்கள் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி, சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
dispute that started over matchbox merchant died sickle attack What happened