6500 கன அடியாக குறைந்த தர்மபுரி ஒகேனக்கல் நீர்வரத்து...!
Dharmapuri Hogenakkal water flow reduced to 6500 cubic feet
தீவிரம் அடைந்த தென்மேற்கு பருவமழை தொடர்ந்து, கேரளா மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7000 கன அடியாக வந்தது. இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.இதனால் இன்று காலை 8 மணி நில வரப்படி நீர்வரத்து 6,500 கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
இதன் காரணமாக சினிபால்ஸ்,மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.மேலும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.அதன் பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.மேலும், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
Dharmapuri Hogenakkal water flow reduced to 6500 cubic feet