தவெக மாநாட்டிற்கு பேனர் வைக்க சென்றபோது சோகம் - மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் பலி.!!
college student died for electric shock attack in srivilliputhur
மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நாளை தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாவது மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த மாநாட்டிற்கு வரும் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்காக மட்டும் ஆறு இடங்கள் தனித்தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் எல்இடி திரைகளுடன் கூடிய டிஜிட்டல் வடிவிலான மேடை, பார்வையாளர் கேலரிகள், மாநாட்டு திடலை சுற்றிலும் கட்சிக் கொடி, தோரணங்கள், பதாகைகள், தற்காலிக கழிப்பறை, குடிநீர், மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ், நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு திண்பண்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தவெக மாநாட்டுக்கு பேனர் வைக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாம்கரிசல் குளம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன். கல்லூரி மாணவரான இவர் தவெக மாநாட்டிற்கு நண்பர்களுடன் சேர்ந்து பேனர் வைப்பதற்காக கம்பி எடுத்துச் சென்றுள்ளார்.
இந்தக் கம்பி எதிர்பாராதவிதமாக மின்சார கம்பியில் பட்டதால் மாணவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவெக மாநாட்டிற்காக பேனர் வைக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
college student died for electric shock attack in srivilliputhur