காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய், மாணவர்களுடன் உரையாடும் வீடியோ வைரல்!
CM Vijay Inaugurates Expanded Kamarajar Breakfast Scheme in Thiruvanmiyur Shares Meal with Students
சென்னை திருவான்மியூர் காந்திகிராமத்தில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை' முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று காலை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் விரிவாக்கத்தின் மூலம், மாநிலம் முழுவதிலும் உள்ள 44,984 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 34 லட்சத்து 64 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவர். இத்திட்டத்திற்காகக் கூடுதலாக ரூ.217.63 கோடி நிதியைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள செங்கல்பட்டு (மதுராந்தகம்) மற்றும் திருப்பூர் (தாராபுரம்) ஆகிய இரு மாவட்டங்களைத் தவிர்த்து, பிற அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் இன்று முதல் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
மாணவர்களுக்குச் சத்தான மற்றும் சுவையான உணவை வழங்கும் நோக்கில், வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் பிரத்யேக உணவுப் பட்டியல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது:
திங்கட்கிழமை: ரவை / கோதுமை உப்புமா
செவ்வாய்க்கிழமை: காய்கறி கிச்சடி
புதன்கிழமை: வெண்பொங்கல்
வியாழக்கிழமை: அரிசி / சேமியா உப்புமா
வெள்ளிக்கிழமை: இனிப்பு வகை உணவு (கேசரி / பொங்கல்)
திருவான்மியூர் பள்ளியில் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய், அங்குள்ள மாணவர்களுக்குத் தன் கையால் உணவு பரிமாறியதுடன், அவர்களுடன் ஒரே வரிசையில் அமர்ந்து காலை உணவை அருந்தினார். உணவின் சுவை குறித்து மாணவர்களிடம் இன்முகத்துடன் கேட்டறிந்த அவர், உரையாடி மகிழ்ந்தார். தொடர்ந்து, வகுப்பறைகளுக்கு நேரில் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர், மழலையர் வகுப்பில் மாணவர்கள் உற்சாகமாகப் பாடிய 'மாம்பழமாம் மாம்பழம்' பாடலைக் கேட்டு நெகிழ்ந்து, அவர்களுக்குக் கைதட்டித் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
English Summary
CM Vijay Inaugurates Expanded Kamarajar Breakfast Scheme in Thiruvanmiyur Shares Meal with Students