தமிழகத்தின் முதல் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை தூத்துக்குடியில்: நாளை தொடங்கி வைக்கவுள்ளார் முதல்வர் ஸ்டாலின்..!
Chief Minister Stalin to inaugurate Tamil Nadu first electric car factory in Thoothukudi tomorrow
ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில் முதல் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலையை முதல்வர் நாளை (04-ஆம் தேதி) தொடங்கி வைக்கவுள்ளார். உலகின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து கார் உற்பத்திக்கான ஆலை அமைப்பதற்காக தூத்துக்குடி – மதுரை புறவழிச்சாலையில் சில்லாதத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்த முதல் படியாக தூத்துக்குடியில் ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 02 பணிமனைகள், 02 கிடங்குகள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சார கார் உற்பத்தி ஆலையில் வி.எப்-6, வி.எப்-7 வகை கார்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இங்கு ஆண்டுக்கு சுமார் 01.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை தமிழ்நாட்டில் முதல் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலையாகும்.
இந்த எலக்ட்ரிக் கார் தொழிற்சாலையை திறந்து வைப்பதற்காக நாளை காலை 09 மணி அளவில் சென்னையிலிருந்து விமானத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடிக்கு செல்லவுள்ளார். அங்கிருந்து அவர் சாலை மார்க்கமாக சென்று, தூத்துக்குடி-மதுரை புறவழிச்சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து அங்கு நடைபெறும் விழாவில் பங்கேற்கவுள்ளார்.

அதன் பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்று தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள மாணிக்கம் மஹாலில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார். அங்கு பல்வேறு தொழில் முதலீடுகள் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, கனிமொழி எம்பி., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டிஆர்பி ராஜா, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி கமிஷனர் பானோத் முருகேந்தர்லால், எம்எல்ஏக்கள் ஓட்டப்பிடாரம் சண்முகையா, விளாத்திகுளம் மார்க்கண்டேயன், வைகுண்டம் ஊர்வசி அமிர்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். முதல்வரின் வருகையையொட்டி தூத்துக்குடி மாநகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Chief Minister Stalin to inaugurate Tamil Nadu first electric car factory in Thoothukudi tomorrow