மாடுகளை சுற்றித் திரிய விட்டால் கடும் நடவடிக்கை! மாநகராட்சி எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


பொது வெளியில் மாடுகள் சுற்றித் திரிந்தால் அவற்றின் உரிமையாள்ளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தங்கள் கால்நடைகளை பொதுவெளியில் திரிய விடும் உரிமையாளர்களின் மீது பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் 1960ன்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி  பொது சுகாதாரத்துறையினரால்  கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை  மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது. 

அவ்வாறு தெருக்களில் சுற்றிதிரிந்து மாநகராட்சியால் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு  அபராதத் தொகையாக மாடு ஒன்றிற்கு ரூ.1,550/- விதிக்கப்படுகிறது. 
அதன்படி, மாடுகள் பிடிக்கப்பட்ட பின்னர், அதனை மாட்டு தொழுவத்திலிருந்து விடுவித்து எடுத்து செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் பிரமாண பத்திரத்தில் மாடுகளை விடுவிக்க மண்டல நல அலுவலர், கால்நடை உதவி மருத்துவர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தை பெற்று சமர்ப்பித்து தங்களுடைய மாடுகளை விடுவித்து கொள்ள வேண்டும்.

மூன்றாவது முறையாக ஒரு மாடு பிடிபடும் பொழுது, உரிமையாளருக்கு திரும்ப வழங்கப்படாமல் புளூ கிராஸ் சொசைட்டியிடம் ஒப்படைக்கப்படும்.
மாநகராட்சியின் சார்பில் 15 மண்டலங்களிலும் மண்டல நல அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையில் காவல் துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகள் தொடர்ந்து பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.  

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சுகாதாரத்துறையின் சார்பில் கடந்த 1-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 13 மாடுகள், 

மணலி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 28 மாடுகள், மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 20 மாடுகள், 

தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 16 மாடுகள், இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 39 மாடுகள், 

திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 33 மாடுகள், அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 36 மாடுகள், 

அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 40 மாடுகள், தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 58 மாடுகள், 

கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 59 மாடுகள், வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 22 மாடுகள்,

ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 16 மாடுகள், அடையாறு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 20 மாடுகள், 

பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 24 மாடுகள், சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 31 மாடுகள் என மொத்தம் 455 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550/- வீதம் ரூ.7,05,250/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

எனவே, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடுகளின் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளை அவர்களின் சொந்த இடங்களிலேயே கட்டி வைக்க வேண்டும்.

பொது வெளியில் திரிய விடக் கூடாது.  மீறி மாடுகளை பொது வெளியில் விடும் பட்சத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் 1960 பிரிவு 11 (1) உட்பிரிவு (h) (i) & (j)-ன் படி அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு மாடுகளின் உரிமையாளர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றம் செய்யும்போது அந்த இடங்கள் குறித்து முன்கூட்டியே அந்தந்த மண்டல நல அலவலர்களின் அனுமதி பெற வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cattle catch


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->