திண்டுக்கல் நத்தம் அருகே பதற்றம்: பா.ஜ., நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை..!
BJP executive hacked to death near Natham Dindigul
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாணார்பட்டி அருகே, முன்னாள் பா.ஜ., மண்டல நிர்வாகி பாலகிருஷ்ணன் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாணார்பட்டி அருகேயுள்ள ராஜாக்காபட்டியை சேர்ந்தவர் முன்னாள் பா.ஜ., மண்டல நிர்வாகி பாலகிருஷ்ணன் (39). ஆற்று மணல் விற்பனை, லாரி தொடர்பான தொழில்களை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இவர் இன்றிரவு சாணார்பட்டி அருகே வந்த போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியதில், சம்பவ இடத்திலேயே பாலகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார்.

உடனடியாக தகவல் அறிந்த திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் மற்றும் டி.எஸ்.பி.,சிபி சாய் சவுந்தர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பாலகிருஷ்ணனின் சடலத்தை மீட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்ப்பாங்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாலகிருஷ்ணன் என்ன காரணத்தால் கொலை செய்யப்பட்டார், கொலையாளிகள் யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை. சுற்றுவட்டார பகுதிகளில் சிசிடிவி காட்சிகளை போலீசார் சேகரித்து விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.
English Summary
BJP executive hacked to death near Natham Dindigul