பயணிகள் கவனத்திற்கு! அரக்கோணம் - திருத்தணி மின்சார ரயில் சேவையில் மாற்றம்...! - தெற்கு ரெயில்வே
Attention passengers Changes Arakkonam Thirutani electric train service Southern Railway
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, பயணிகளின் பாதுகாப்பும், சேவையின் தரமும் மேம்படும் வகையில் முக்கிய பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் வழித்தடத்தில் அமைந்துள்ள அரக்கோணம் பணிமனையில், அடுத்த மாதம் மே 16-ஆம் தேதி வரை தினமும் இரவு 12.45 மணி முதல் அதிகாலை 2.15 மணி வரை (1 மணி 30 நிமிடம்) மற்றும் மதியம் 12.45 மணி முதல் 1.45 மணி வரை (1 மணி நேரம்) பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற உள்ளன.

இதன் காரணமாக, ரெயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.அதன்படி, திருத்தணியில் இருந்து அரக்கோணம் நோக்கி இரவு 9.15 மணி மற்றும் 11.10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள், மே 16-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், அரக்கோணத்தில் இருந்து திருத்தணி நோக்கி அதிகாலை 4 மணி மற்றும் 5 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள், இன்று முதல் மே 17-ஆம் தேதி வரை இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூர்மார்க்கெட் பகுதியில் இருந்து காலை 11 மணி மற்றும் இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்கள், திருவாலங்காடு-அரக்கோணம் இடையே மட்டுமே இயங்கும் வகையில் பகுதி நேர ரத்துசெய்யப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் நோக்கி வரும் மின்சார ரெயில், திருத்தணி – திருவாலங்காடு இடையே சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
பணிகள் நிறைவடையும் வரை இந்த மாற்றங்கள் தொடரும் என்றும், பயணிகள் முன்கூட்டியே தங்கள் பயணத் திட்டங்களை சரிசெய்து கொள்ள வேண்டும் என்றும் தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.
English Summary
Attention passengers Changes Arakkonam Thirutani electric train service Southern Railway