அண்ணாநகர் சம்பவம்: தாமதம் கூடாது...! - தினசரி விசாரணைக்கு உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு
Annanagar incident There should be no delay High Court orders strict daily investigation
சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கை, போக்சோ சிறப்பு நீதிமன்றம் நாள்தோறும் விசாரித்து விரைவாக முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற சிறுமியின் பெற்றோரை அண்ணாநகர் மகளிர் காவலர்கள் தாக்கியதாக எழுந்த புகாரை அடுத்து, நீதிமன்றம் இந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.

நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் எம். ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கின் புலனாய்வு மற்றும் விசாரணை அனைத்தும் போக்சோ சட்ட விதிமுறைகளின்படி நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மேலும், சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும் காவல் அதிகாரிகள் மீது சிறப்புப் புலனாய்வுக் குழு நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவர்கள் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே 4 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், இறுதி இழப்பீட்டுத் தொகையைச் சிறப்பு நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
English Summary
Annanagar incident There should be no delay High Court orders strict daily investigation