அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது...துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைப்பு!  
                                    
                                    
                                   Alanganallur Jallikattu begins Deputy Chief Minister Udhayanidhi Stalin inaugurated the event
 
                                 
                               
                                
                                      
                                            உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. போட்டியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்துள்ளார். தமிழக வணிகம் மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் கலெக்டர் சங்கீதா ஆகியோரும் நிகழ்ச்சியில் உடனிருந்தனர். 1,100 காளைகள், 900 வீரர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்றுவருகிறது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு, மதுரையில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.இதன்படி, பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1,100 காளைகள் பங்கேற்றன. 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில், 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 23) என்பவருக்கு முதல் பரிசாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் மற்றும் கன்றுடன் கூடிய கறவை பசு பரிசாக வழங்கப்பட்டன. 
இதனை தொடர்ந்து, நேற்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 1,100 காளைகள் பங்கேற்றன. 910 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் மாடுபிடி வீரர்களுக்கு டி.வி., பிரிட்ஜ், பீரோ, சைக்கிள், 2 சக்கர வாகனங்கள், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. போட்டியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்துள்ளார். தமிழக வணிகம் மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் கலெக்டர் சங்கீதா ஆகியோரும் நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.
காளைகளை பிடிக்க வந்துள்ள மாடுபிடி வீரர்கள் காலை 7.42 மணி அளவில் உறுதிமொழி ஏற்றதனை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியுள்ளன. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதன்பின்னர் போட்டிக்கான காளைகள் அவிழ்த்து விடப்பட்டது . 1,100 காளைகள், 900 வீரர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்றுவருகிறது.ஜல்லிக்கட்டை முன்னிட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
                                     
                                 
                   
                       English Summary
                       Alanganallur Jallikattu begins Deputy Chief Minister Udhayanidhi Stalin inaugurated the event