மக்கள் பணத்தில் விளம்பர அரசியலா...? 'சென்னைக்கு 300 பஸ்களை வரவழைத்த ஆளுங்கட்சி'...! - டிடிவி தினகரன் வெளியிட்ட காரசாரக் கண்டனம்..!
Advertising politics people money ruling party brought 300 buses to Chennai TTV Dhinakaran slanderous condemnation
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதல்-அமைச்சர் பிறந்தநாள் விழாவையொட்டி சென்னைக்கு வரவழைக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தள பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவதற்கான தொடக்க விழாவுக்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300 அரசுப் பேருந்துகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடந்த 3 நாட்களாக பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.முதல்-அமைச்சர் பிறந்தநாள் நிகழ்வுக்காக கடந்த 22-ஆம் தேதி சென்னைக்கு வரவழைக்கப்பட்ட இந்த பேருந்துகளை இயக்குவது குறித்தோ, மீண்டும் சொந்த பகுதிகளுக்கு அனுப்புவது குறித்தோ இதுவரை எந்தத் தெளிவான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
இதன் காரணமாக, அந்த பேருந்துகளை இயக்கி வந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் என்ன செய்வது என்ற குழப்பத்திலும் மனஅழுத்தத்திலும் தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி திணறி வரும் சூழலில், முதல்-அமைச்சரின் பிறந்தநாள் என்ற பெயரில் கூடுதல் செலவையும் நிர்வாக சுமையையும் ஏற்படுத்தும் வகையில் 300 அரசுப் பேருந்துகளையும் தேவையின்றி சென்னைக்கு அழைத்து வந்து காத்திருக்க வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்?தமிழகம் முழுவதும் பல அரசுப் பேருந்துகள் காலாவதியான நிலையில், எப்போது வேண்டுமானாலும் விபத்துக்குள்ளாகும் அபாயத்தில் இயங்கி வருகின்றன.
அவற்றை சீரமைத்து பாதுகாப்பான சேவையை உறுதி செய்வதில் கவனம் செலுத்தாமல், ஏற்கனவே இயக்கத்தில் உள்ள பேருந்துகளையே சென்னைக்கு வரவழைத்து நிறுத்தி வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, முதல்-அமைச்சரின் பிறந்தநாள் விழாவுக்காக சென்னைக்கு வரவழைக்கப்பட்ட அனைத்து பேருந்துகளையும் உடனடியாக புதிய வழித்தடங்களில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், போக்குவரத்துக் கழகத்திற்கு தேவையற்ற நிதிச்சுமையும் நிர்வாக நெருக்கடியும் ஏற்படுத்தும் வகையில் இத்தகைய முடிவுகளை எடுத்த அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Advertising politics people money ruling party brought 300 buses to Chennai TTV Dhinakaran slanderous condemnation