பயோ காஸ் மூலம் 15 ஆண்டுகளாக சமையல் செய்யும் பெண் கவுன்சிலர்..!
A Woman Councilor Who Has Been Cooking with Biogas for 15 Years
ராணிப்பேட்டை அருகே 15 ஆண்டுகளாக பயோ காஸ் மூலம் பெண் கவுன்சிலர் சமையல் செய்து வருகிறார்.
அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், காஸ் சிலிண்டர் விலையும் அடிக்கடி உயர்வடைந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக பயோகாஸ் பயன்படுத்தி பெண் கவுன்சிலர் ஒருவர் சமையல் செய்து வருகிற செய்தி பரவலாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மேல்வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கனின் மனைவி புவனேஸ்வரி. 04வது வார்டு உறுப்பினர்.
இவர், கடந்த 15 ஆண்டுகளாக காஸ் சிலிண்டர் பயன்படுத்தாமல் பயோ காஸ் முறையை பயன்படுத்தி சமையல் செய்து வருகிறார். இதுகுறித்து புவனேஸ்வரி தெரிவித்துள்ளதாவது;

''கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் வீட்டில் இயற்கை முறையில் மாட்டுசாணத்தில் பயோ காஸ் தயாரித்து தினமும் சமையல் செய்கிறேன். இதற்காக எனது வீட்டின் அருகில் 10 அடியில் தொட்டி அமைத்து அதில் முதலில் 01 டன் சாணத்தை கரைத்து ஊற்றினோம். பின்னர் அதன் மீது பைபர் வைக்கப்பட்டுள்ளது. தொட்டியிலிருந்து தேவையற்ற கழிவுகள் பைப் வழியாக வெளியேறிவிடும்.
சாணம் மட்டும் தொட்டியில் இருக்கும். வெயில் காலத்தில் அதிகளவில் நுதித்தல் தன்மை ஏற்பட்டு பயோகாஸ் தாராளமாக கிடைக்கும். மழைக்காலங்களில் நுதித்தல் தன்மை குறைவாக இருக்கும். அப்போது, அதற்கேற்றபடி அதிகளவில் சாணம் கரைத்து ஊற்றினால் தேவையான காஸ் கிடைத்துவிடும். பயனில்லாத கழிவுகளை விவசாயத்திற்கு உரமாக பயன்படுத்தலாம். இந்த பயோ காஸ் திட்டத்தில் விபத்து பயம் இல்லை. முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பயன்படுத்தலாம். 04 மாடுகளின் சாணம் இருந்தால் போதும்.
பயோ காஸ் திட்டத்தை செயல்படுத்தலாம். இதனால் நமக்கு சேமிப்பும் கிடைக்கும். சிலிண்டர் எதிர்பார்க்கக்கூடிய சூழல் நமக்கு வராது. இந்த பயோ காஸ் திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.'' என்று கூறியுள்ளார்.
English Summary
A Woman Councilor Who Has Been Cooking with Biogas for 15 Years