யூடியூப்பில் வீடியோ பார்த்து எக்ஸ்பெரிமெண்ட்; மகனை காப்பாற்ற முயன்ற தந்தைக்கும் படு தீக்காயம்; வீபரீதமான முயற்சி..!
A father also sustained burn injuries while trying to save his son during an experiment he attempted after watching a video on YouTube
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, யூடியூப் வீடியோவைப் பார்த்து எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தைக் கொண்டு பரிசோதனை செய்ய முயன்ற சிறுவன், உடல் கருகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தைக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோலார்பேட்டை அடுத்த பார்சம்பேட்டை, சோலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையரசு. இவரது 11 வயது மகன் கவின். அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். படிப்பில் சுட்டியான கவினுக்கு, புதிய அறிவியல் பரிசோதனைகளைச் செய்து பார்ப்பதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது.
இந்நிலையில், வீட்டின் மாடியில் வர்ணம் பூசுவதற்காக வைக்கப்பட்டிருந்த 'தின்னர்' (Thinner) திரவத்தைப் பயன்படுத்தி, யூடியூப் வீடியோ ஒன்றைப் பார்த்து சிறுவன் கவின் தனியாகப் பரிசோதனை செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகத் தின்னர் சிறுவனின் ஆடையில் பட்டுத் தீப்பிடித்துள்ளது.
கண் இமைக்கும் நேரத்தில் தீ உடல் முழுவதும் பரவியதால் சிறுவன் வலியால் அலறியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு மாடிக்கு ஓடிவந்த பெற்றோர், மகன் தீயில் எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். தந்தை இளையரசு, தீயில் எரிந்த மகனைக் கட்டிப்பிடித்துத் தண்ணீர் ஊற்றித் தீயை அணைத்துள்ளார். இந்த மீட்புப் போராட்டத்தில் தந்தை இளையரசுக்கும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன.
படுகாயமடைந்த சிறுவன் கவின், உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவனின் உடலில் 80 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, ஆபத்தான நிலையில் இருந்த சிறுவன், மேல் சிகிச்சைக்காகச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (KMC) அவசர அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், மகனைக் காப்பாற்ற முயன்று காயமடைந்த தந்தை இளையரசு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
படிப்பில் சிறந்து விளங்கிய சிறுவன், யூடியூப் பார்த்து விபரீதப் பரிசோதனையில் ஈடுபட்டு உயிருக்குப் போராடும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A father also sustained burn injuries while trying to save his son during an experiment he attempted after watching a video on YouTube