தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு வழக்கு; ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 97 பேர் ஆஜர்; விசாரணையில் நடந்தது என்ன..?
97 people who protested against the Sterlite plant appeared in court in connection with the Thoothukudi police firing case
தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு வழக்கில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக 100 பேர் மீது தனி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்த வழக்கின் விசாரணை இன்று மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நூறு பேரில் 97 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். விசாரணைக்கு பின்னர் குறித்த வழக்கின் விசாரணை ஜூன் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அன்று நூறு பேரும் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ஹென்றி திபென் கூறியதாவது;

''ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் படி, அதிகாரிகள் 21 பேரை குற்றவாளிகளாக குறிப்பிட்டிருந்தார். அந்த அறிக்கையில் ஐஜி, டிஐஜி, ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோர் துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நீதிபதி அறிக்கையில் துப்பாக்கியால் சுட்டவர்கள் பட்டியலில் 13 காவல் அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது என்றும், இவர்கள் யார் உத்தரவின் பேரில் சுட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 06-வது இடத்தில் இருப்பவர் மதுரை மாநகர் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கை சிபிஐ சரியாக விசாரிக்கவில்லை என்றும், இதைத்தான் உயர் நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. தூய்மையான ஆட்சி தருவதாக கூறியவர்கள் நூறு பேர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதேப்போன்று 21 அதிகாரிகள் மீது வழக்கு பதிய வேண்டும் என்றும், குற்றம் செய்த காவல்துறையினரை அரசுகள் பாதுகாக்கின்றன என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், அதிகாரிகள் பேச்சை கேட்டு அரசு செயல்படுகிறதாகவும், அதிகாரிகள் பேச்சை கேட்காமல் செயல்பட்டிருந்தால் திமுக அரசு தேர்தலில் தோற்று இருக்காது என்றும், இந்த வழக்கு வேறு விதமாக போயிருக்கும் என்றும் வழக்கறிஞர் ஹென்றி திபென் கூறியுள்ளார்.
English Summary
97 people who protested against the Sterlite plant appeared in court in connection with the Thoothukudi police firing case