கோப்பையை கைப்பற்றியது இந்தியா! இந்தியா அபார வெற்றி! வியக்க வைத்த அய்யர்! - Seithipunal
Seithipunal


இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியானது நேற்று டிரினிடாட்  மைதானத்தில் நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தாக, இரண்டாவது போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. 

நேற்று தொடரின் இறுதி மற்றும் மூன்றாவது போட்டி அதே டிரினிடாட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் 20 ஓவர் போட்டிகளின் மூன்று போட்டிகள், ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் என மொத்தம் ஐந்து போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை டாஸ் வெல்ல, முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் நேற்று டாஸ் வென்றார். அவர் உடனடியாக தங்களது அணி பேட்டிங்கை தேர்வு செய்கிறது என அறிவித்தார். 

இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய குல்திப் யாதவ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சாஹல் மீண்டும் அழைக்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. முதலில் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு லூயிஸ் மற்றும் கிறிஸ் கெயில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். முதல் 4 ஓவர்களில் வெறும் 13  ரன்கள் மட்டுமே எடுத்த  இந்த ஜோடி,  அடுத்த 6 ஓவர்களில் 101 ரன்களை குவித்து இந்திய அணியின் பவுலர்களை திணற வைத்தது.

முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி எடுக்க, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விழி பிதுங்கி நின்றார். அதன்பிறகு சுழற்பந்து வீச்சாளர்கள் சாஹல் அறிமுகப்படுத்தப்பட முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து அசத்தினார். லூயிஸ் 29 பந்துகளில் 5  பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களையும் விலாசி 43 ரன்களை குவித்து வெளியேறினார். அதற்கடுத்து சில ஓவர்களிலேயே மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த கிறிஸ் கெயில், 41 பந்துகளில் 8 பவுண்டரிகளையும், 5  சிக்ஸர்களையும் விளாசி 72 ரன்களை குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். 

அதன்பிறகு ஷை ஹாப் ஷிமரோன் ஹெட்மயேர் களத்தில் நிற்க வெஸ்ட் இண்டீஸ் அணி 158 ரன்களுக்கு 2  விக்கெட்டுகளை எடுத்திருந்த போது, கடுமையான மழை பெய்ததால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மீண்டும் ஓவர்கள் குறைக்கப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா 35 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டு ஆட்டம் தொடங்கியது. அப்பொழுது விளையாடிய  வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்தது.

இந்திய அணியின் தரப்பில் கேதர் ஜாதவ், ஜடேஜா, சாஹல் ஆகியோரின் பந்துவீச்சில் மட்டுமே ரன்கள் கட்டுப்படுத்தப்பட்டது. வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, கலீல் அகமது ஆகிய மூவரின் பந்து வீச்சிலும், சுத்தமாக எடுபடாமல் ரன்களை வாரி வழங்கி இருந்தார்கள். அவர்களுக்கு ஆறுதலாக கலீல் அஹமது 3 விக்கெட்டுகளையும் ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். 

அதன் பின்னர் இந்திய அணிக்கு இலக்கானது DLS விதிப்படி மாற்றியமைக்கப்பட்டது. அதாவது இந்திய அணிக்கு 35 ஓவர்களில் 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு வைக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணியின் ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் களம் இறங்கினார்கள். அதிரடியாக ஆட தொடங்கிய இந்த இணையானது, நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ரோகித் சர்மா 6 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, அதன் பிறகு வந்த விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான், இருவரும் நிதானமாக விளையாடினார்கள். ஒரு கட்டத்தில் சீரான அளவில் ரன்கள் குவித்து வந்த நிலையில், ஷிகர் தவான் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பாண்ட் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழக்க இந்திய அணி 91 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற நிலையில் இருந்து, 92 ரன்களுக்கு 3  விக்கெட் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. 

அப்போது இந்திய அணி வெற்றிக்கு ஒரு ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டது. அப்போது களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர், விராட் கோலியுடன் முதலில் சில ஓவர்களை தடுமாற்றத்துடன் சந்தித்தாலும், அதற்கு அடுத்து வந்த ஓவர்களில் அதிரடியாக சிக்ஸர்களை பறக்கவிட்டு, விராட் கோலிக்கு நெருக்கடியை குறித்துக் கொடுத்தார். மறுமுனையில் விராட் கோலியும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தார். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்த நிலையில், ஸ்ரேயாஸ் அய்யர் 65 ரன்களில் ஐந்து சிக்ஸர்களையும் மூன்று பவுண்டரிகளையும் விளாசி ஆட்டமிழந்தார். அவர் 41 பந்துகளை மட்டுமே சந்தித்தார் என்பது குறிப்பிடதக்கது. 

அதற்கடுத்து வந்த கேதர் ஜாதவ் ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுக்க மறுமுனையில் விராட் கோலி 99 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றி கனவை தகர்த்தார். இந்திய அணி 32.3 ஓவர்களில் 4  விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 256  என்ற இலக்கை எட்டியது. இதன்மூலம் இந்திய அணி 6  விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை எப்படி எடுபடுடவில்லையோ, அதேபோல வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சாளர் பந்து வீச்சும் சுத்தமாக எடுபடவில்லை. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஓவருக்கு 6 ரன்களுக்கும் கீழ் கொடுத்து இருந்தார்கள். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் அனைவருமே ஆறு ரன்களுக்கு மேல் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரை இந்திய அணி 2க்கு 0 என்ற கணக்கில் வென்று உள்ளது. தொடரின் நாயகன் மற்றும் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDIA WON THE MATCH AND SERIES AGAINST WEST INDIES


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->