சபரிமலை தங்க திருட்டு வழக்கு: நடிகர் ஜெயராமுக்கு ED சம்மன்…! - 17-ந்தேதி விசாரணை
Sabarimala gold theft case ED summons actor Jayaram Hearing 17th
சபரிமலை ஐயப்பன் கோவிலின் துவாரபாலகர் சிலைகளில் பூசப்பட்டிருந்த தங்க முலாம்களை சுத்தப்படுத்தி மீண்டும் பொருத்தும் பணிகள் தொடங்கிய போது எதிர்பாராத பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பராமரிப்பு பணிக்காக சிலைகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு புதுப்பிக்கப்பட்ட பின்னர் மீண்டும் கோவிலுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

ஆனால், அந்தச் செயல்முறையின் போது தங்க முலாம் காணாமல் போனதாக எழுந்த புகார் கேரளா முழுவதும் அதிர்ச்சியை கிளப்பியது.இந்த விவகாரம் தீவிரமடைந்ததால் கேரள உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
அந்த விசாரணையில், தங்க முலாம் பூசும் பணியை மேற்கொண்ட உன்னி கிருஷ்ணன் போற்றி கைது செய்யப்பட்டார். அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கர்நாடகாவை சேர்ந்த நகை வியாபாரி கோவர்த்தன், தேவசம்போர்டின் முன்னாள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் வலைவீசப்பட்டனர்.
இதற்கிடையில், தங்க முலாம் பூசப்பட்ட சிலைகள் சென்னையில் நடிகர் ஜெயராம் இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகி புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.இதனால் நடிகரின் பெயரும் வழக்கில் கொடுவரப்பட்டது.
ஆனால் விளக்கம் அளித்த ஜெயராம், “ஆசார நம்பிக்கையால் பூஜை செய்ததை தவிர எந்த வித லாபமும் இல்லை” எனத் தெளிவுபடுத்தினார்.அவரிடம் SIT ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்த நிலையில், தற்போது பணமோசடி கோணத்தில் அமலாக்கத்துறையும் (ED) களமிறங்கி அதிரடி சோதனைகள் நடத்தியுள்ளது.
அது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தப்பட்டதால் வழக்கு மேலும் சூடுபிடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஜெயராமுக்கும் அமலாக்கத்துறை 17 -ம் தேதி நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும், சபரிமலையில் உண்மையில் எவ்வளவு தங்கம் காணாமல் போனது, தற்போதுள்ள தங்கம் அசல்தானா? என்பது குறித்து விஞ்ஞான ரீதியான ஆய்வு தேவைப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக மீண்டும் கோவிலில் ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதோடு முடிவல்ல; 2017-ல் நிறுவப்பட்ட புதிய கொடிமரம் அமைப்பிலும் முறைகேடு நடந்திருக்கலாம் என விஜிலன்ஸ் துறை சுட்டிக்காட்டியுள்ளது. பழைய கொடிமரத்திற்கு சேதமில்லை என்ற போதிலும் புதியது அமைக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கும் தனி விசாரணை உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
Sabarimala gold theft case ED summons actor Jayaram Hearing 17th