வன்னியர் சங்க தலைவர் குரு மணிமண்டபம்! கொந்தளித்த திமுக, திருப்பி கொடுத்த பாமக!  - Seithipunal
Seithipunal


மறைந்த வன்னியர் சங்க தலைவர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.குருவிற்கு அவரது சொந்த ஊரான காடுவெட்டியில் நேற்று முன்தினம் பாமக சார்பில் கட்டப்பட்ட மணிமண்டபம் ஆனது பாமக நிறுவனர் ராமதாஸால் திறந்து வைக்கப்பட்டது. அப்போது அங்கே ராமதாஸ் பேசிய சில காட்சிகளை கொண்டு, திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் சமூக வலைதளத்தில் ஒரு பதிவினை வெளியிட்டார். அந்த பதிவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாமக மாநில துணை பொதுச்செயலாளர், மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். 

சிவசங்கர் எழுதிய பதிவானது, "குரு நினைவு மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசும் போது, "இங்கே, இந்த நேரத்தில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன், அன்புமணி அவர்களும் கோடிட்டுக் காட்டினார்கள். குருவினுடைய வாழும் காலத்திலே அவரை இங்கே வளராமல் செய்வதற்கு, அவரை கொல்ல வேண்டும் என்று முயற்சி செய்தவர்கள் அப்பொழுது ஆண்டவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பெரியவர்கள். அவரை கொல்வதற்கு பல்வேறு சதி திட்டங்களை தீட்டினார்கள். அது வைத்திக்கு தெரியும். அப்படி அந்த திட்டங்களை நிறைவேறாமல் செய்தவர்கள் நானும், ஜி.கே.மணி அவர்களும். அது தெரிந்து நாங்கள் டி.ஜி.பி அலுவலகத்திற்கு உடனடியாக அவரை போக சொல்லி அந்த திட்டம் நிறைவேறாமல் செய்வதற்கு. இல்லை என்றால் குருவை எப்போதோ நாம் இழந்திருப்போம். குருவை கொல்வதற்கு சதி செய்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள். அப்போது ஆட்சியில் இருந்தவர்கள். அது யார் என்று இப்போது நான் சொல்லக் கூடாது. நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். இங்கே இருந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தி.மு.கவை சேர்ந்தவர்கள். அது தெரியும். இங்கே இருக்கிறவர்கள் எல்லாருக்கும் தெரியும், அவர்கள் யாரென்று. இந்தத் தேர்தலில் கூட அவர்கள் பெரிய சதி செய்தார்கள், நம்முடைய அணி வெற்றி பெறக் கூடாது என்பதற்கு" என்று பேசியிருக்கிறார்.

நான் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.

1. தி.மு.க ஆட்சி நடைபெற்றது 2006- 2011 ஆம் ஆண்டு. எட்டு ஆண்டுகள் கழித்து இந்தக் குற்றச்சாட்டை சொல்லும் நோக்கம் என்ன ?

2. ஆதாரம் இருந்தால் காவல்துறையில் புகார் கொடுக்கலாமே ?

3. குருவை கொல்ல தி.மு.கவினர் திட்டம் தீட்டியிருந்தால் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் ஏன் தி.மு.க உடன் கூட்டணி வைத்தீர்கள் ?

4. குருவை கொல்ல தி.மு.கவினர் திட்டம் தீட்டியிருந்தால், குரு எப்படி தி.மு.க கூட்டணியில் போட்டியிட முன் வந்திருப்பார் ?

2011 ஆம் ஆண்டு தி.மு.க - பா.ம.க இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்ற நேரத்தில் ஜெயங்கொண்டம் தொகுதி தி.மு.கவுக்கு என தி.மு.க பேச்சுவார்த்தை குழு சொல்லி விட்டது. பா.ம.க குழு ஜெயங்கொண்டம் தொகுதி குருவுக்கு வேண்டும் என கேட்டது. ஒரு நாள் பேச்சுவார்த்தை நின்று போனது. பிறகு அன்று கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனிடம் அன்புமணி பேசி, அவர் கழகத் தலைவர் தளபதி அவர்களிடம் பேசி ஜெயங்கொண்டம் தொகுதி பா.ம.கவுக்கு வழங்கப்பட்டது. மறைந்த குரு அவர்கள் அறிவாலயம் சென்று தலைவர் கலைஞரிடத்திலே வாழ்த்து பெற்றார். தலைவர் கலைஞர் அவர்கள், அப்போது குரு அவர்களை தட்டிக் கொடுத்து "ஜெயங்கொண்டத்திலே ஜெயம் கொள்வாய்", என வாழ்த்தியதை குரு எல்லோரிடத்திலும் பகிர்ந்து கொண்டார். குருவும் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். அந்த குருவை தி.மு.க கொலை செய்ய பார்த்தது என சொல்வது எவ்வளவு பெரிய பாதகம்?

ராமதாஸ் ஏன் இப்படி பிதற்ற வேண்டும், காரணம் இருக்கிறது.

குரு அவர்கள் மறைவிற்கு பிறகு, பா.ம.கவின் சரிவு துவங்கி விட்டது. குரு உடல்நலம் குன்றி இருந்த நேரத்தில் ராமதாஸோ, அன்புமணியோ உதவவில்லை என்ற குற்றச்சாட்டு வன்னியர் சங்கத்தினராலேயே சொல்லப்பட்டது. அப்போது உதவி இருந்தால், சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று குரு நீண்ட காலம் வாழ்ந்திருப்பார் என்று எதிர்பார்த்தார்கள். அதை குரு அவர்களின் சகோதரியும் தெரிவித்திருந்தார். இந்த சூழலுக்கு பிறகு குரு அவர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு செல்லவில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே. மிகுந்த மன வருத்தத்திற்கிடையே குரு சிகிச்சை கூட எடுத்துக் கொள்ளாமல் இருந்தார் என்பது அனைவரும் அறிந்தது. கடைசி நாட்களில் மருத்துவ உதவி செய்தார் ராமதாஸ். ஆனால் அதை வன்னியர் சங்க இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனுடைய வெளிப்பாடு தான் குரு மறைவுற்ற அன்று அன்புமணிக்கு காடுவெட்டி கிராமத்தில் காட்டப்பட்ட எதிர்ப்பு.

அடுத்து குரு மறைவிற்கு திரண்ட இளைஞர்கள் கூட்டம் ராமதாஸை மிரள வைத்தது. பிற்காலத்தில் வன்னியர் சங்கம் என்றால் குரு என்ற அடையாளம் ஏற்பட்டு விடும் என்பதை உணர்ந்து கொண்டார். அதனால் குருவை புதைத்த இடத்தில் நினைவிடம் எழுப்பப்படாமல் அ.தி.மு.க அரசின் ஆதரவோடு தடுத்து விட்டார். முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடக்க விடாமல் தடுத்தார். குரு நினைவிடத்திற்கு குருவின் மகன், மகளையே செல்ல விடாமல் தடுத்தார்.

வேறு இடத்தில் இப்போது நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. இதை எல்லாம் திசை திருப்பத் தான் இப்போது 'குருவை கொல்ல முயற்சி' என ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை சொல்கிறார். அதிலும் குருவுக்காக கூடிய இளைஞர்கள் கூட்டத்தை தக்க வைக்க தான், குருவின் மீது அக்கறையான இந்தப் பேச்சு.

காடுவெட்டி குரு அவர்களை பல முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல நீதிமன்றங்களுக்கு போலீஸ் வேனில் அலைக்கழித்து, அவர் உடல்நலம் முழுவதும் குன்றி, நோய் வாய்ப்படுவதற்கு அதிமுக ஆட்சிதான் காரணம் என்று ராமதாஸே குற்றம் சுமத்திய காலம் உண்டு. அது தான் உண்மையும். காடுவெட்டி குருவுக்கு அதிமுக ஆட்சியில் நடந்த அராஜகங்களை மறந்துவிட்டு 'தேர்தல்கால அறுவடைக்காக' அதிமுகவுடன் கூட்டணி வைத்து, அந்தக் கட்சியின் முதலமைச்சர், அமைச்சர்களை எல்லாம் தைலாபுரம் தோட்டத்திற்கு அழைத்து வந்து தடபுடலாக அறுசுவை விருந்தளித்த ராமதாஸ் அவர்கள் திமுக மீது பாய்வதற்கு தேர்தலில் படுதோல்வி அடைந்தது இன்னொரு காரணம் .

திராவிட முன்னேற்றக் கழகம், வன்னியப் பெரு மக்களுக்காக ஆற்றிய தொண்டினை நினைவுகூர்ந்து அச்சமுதாய மக்கள் பெருவாரியாக திமுகவிற்கு வாக்களித்து விட்டார்கள், கழகத் தலைவர் தளபதி அவர்கள் தலைமையிலான கூட்டணிக்கு 39 நாடாளுமன்றத் தொகுதிகளை வழங்கி விட்டார்கள் என்ற எரிச்சலிலும், டாக்டர் ராமதாஸ் அவர்களின் சுயநலத்திற்கு அரசியலை பயன்படுத்துவதை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு உணர்ந்து விட்டார்கள் என்பதால் திசை திருப்பும் அரசியலில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் திமுக மீது பழி போட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக, குரு இறப்பிற்கான வன்னிய இளைஞர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க, தி.மு.க மீது பொய் புகார் கூறி சேற்றை அள்ளி இறைக்கிறார் டாக்டர் ராமதாஸ். இதை திமுக சட்ட ரீதியாக சந்திக்கும்" என சிவசங்கர் எழுதியுள்ளார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வைத்தி எழுதிய பதிவானது, "நேற்று முன் தினம் (17.09.2019) காடுவெட்டியில் அண்ணன் மாவீரர் அவர்களின் மணிமண்டப திறப்பு விழா நடைபெற்றது.

தனது மூத்த மகனின் மணிமண்டபத்தினை திறந்து வைத்து உரையாற்றிய "தமிழினப் போராளி" மருத்துவர் அய்யா அவர்கள் இந்த தி.மு.க கயவாளிக் கூட்டத்தினைப் பற்றி பேசினார்.

மாவீரன் அவர்களை பலமுறை நயவஞ்சகமாக கொலை செய்ய திட்டமிட்டதை குறிப்பிட்டுப் பேசினார். அது வைத்திக்கு தெரியும். நானும் ஜி.கே.மணியும் தான் பல முறை டி.ஜி.பி அலுவலகத்தை தொடர்பு கொண்டு மாவீரன் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தோம் என்று தெரிவித்தார் மருத்துவர் அய்யா அவர்கள்.

இதற்கு அரியலூர் மாவட்ட வாரிசு அரசியல்வாதி ஒருவர் பதில் கூறுவதாக எண்ணி பிதற்றி கொட்டியுள்ளார்.
அய்யா அவர்களை கேள்வி கேட்க தமிழகத்தில் தற்போது எவருக்கும் தகுதி இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை..

இருந்தாலும் வாரிசு அரசியல்வாதி ( சிவசங்கர் ) கேள்விக்கு நான் சில கேள்விகளை முன்வைக்கிறேன்.

அண்ணன் மாவீரர் அவர்களை முதன் முதலில் 149 நாட்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது இந்த கயவாளி திமுக கூட்டம் தான். அப்போது சிறையில் வைத்தே மாவீரர் அவர்களை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டினர் திமுக -வினர். அதை முறியடித்தது மருத்துவர் அய்யா அவர்கள்.

2011 -ம் கூட்டணி எப்படி அமைந்தது என்று இந்த வாரிசு அரசியல்வாதிக்கு தெரிய வாய்ப்பில்லை. மருத்துவர் அய்யா அவர்கள் தனது இல்ல திருமண அழைப்பிதழை வழங்க மறைந்த கருணாநிதியை சந்தித்தார்கள். அப்போது மருத்துவர் அய்யா அவர்களின் கையை எப்படி எல்லாம் பிடித்து கூட்டணி அமைத்தார்கள் என்று உயர்மட்ட தலைவர்களுக்கு தெரியும்.

பிறகு சட்டமன்ற தேர்தல் வந்தது ஜெயங்கொண்டம் தொகுதி பாமக-வுக்கு ஒதுக்கப்பட்டு மாவீரன் அவர்கள் போட்டியிட்டார். ஆனால் கருணாநிதியே ஜெயங்கொண்டம் தொகுதி பாமக-வுக்கு என்று அறிவித்தும் திமுக நிர்வாகிகள் ஒரு சிலர் சரிவர தேர்தல் பணி செய்யவில்லை. அதையும் மீறி மாவீரன் அவர்கள் பிரமாண்ட வெற்றி பெற்றார் என்பது வரலாறு.

ஆனால் இந்த வாரிசு அரசியல்வாதி என்ன சொல்கிறாரென்றால், ஜெயங்கொண்டம் தொகுதியை மாவீரருக்கு பரிந்துரைத்து பெற்று தந்தது திருமாவளவன் என்கிறார். மாவீரரை நன்கு அறிந்த திமுகவினர் கூட இந்த அபாண்டமான பொய்யை நம்ப மாட்டார்கள்.

ஒரு சீட்டுக்காக பிறரை பரிந்துரைக்க சொல்ல வேண்டிய நிலையில் இருந்து கொண்டு, சீட் கிடைக்குமோ கிடைக்காதோ என ஏங்கி கொண்டு பிழைக்கும் ஈனப்பிழைப்பை இந்த பொய்யர் வேண்டுமானால் பிழைக்கலாம்.

மாவீரன் தன்மானத்தோடு வாழ்ந்தவர் என்பதை அனைத்து கட்சி வன்னியர்களும் அறிவார்கள். அடுத்த தேர்தலில் இந்த பொய்யர் கேட்கும் அந்த ஒற்றை சீட்டுக்காக மாவீரருக்கு மற்றொரு கட்சி தலைவர் பரிந்துரைத்தார் என மாவீரர் இறந்தபிறகு இவர் பேசுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

இவ்வளவு கேள்வி கேட்கும் இந்த வாரிசு அரசியல்வாதி இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக லட்சபோ லட்ச பாட்டாளிகளின் உழைப்புதான் அவரே மறுக்க முடியாத உண்மை..

கடந்த 2016 தேர்தலில் நாம் தனித்து களம் கண்டோம். இந்த வாரிசு அரசியல்வாதி திமுக சார்பில் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டார். என்ன சொல்லி மக்களிடம் வாக்கு கேட்டார் தெரியுமா? முன்னொரு காலத்தில் வன்னியர் ஒருவர் இங்கே எம்.எல்.ஏ வாக இருந்தது கோ.சிவப்பெருமாள் தான். அதன் பிறகு நான் தான் வன்னியராக அரியலூர் தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று சொல்லி வன்னியர்களிடம் ஓட்டுப் பிச்சை கேட்டார். ஆனால் இவர் நடிப்பை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

மற்றபடி இவரும் இவர் தந்தையும் வன்னியர்களுக்கு செய்த துரோகங்களை நாம் இவ்வுலகிற்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை.அரியலூர் மாவட்ட திமுக - வினரை கேட்டால் அவர்களே தெளிவாக கூறுவார்கள்.

இவ்வளவு காலம் கழித்து இக்குற்றச்சாட்டை இப்போது ஏன் கூற வேண்டும் என்று வினா எழுப்பியுள்ளார். இவ்வினாவிற்கான பதிலை மருத்துவர் அய்யா அவர்கள் 2008ம் ஆண்டே கூறிவிட்டார்கள்

தேர்தலில் வெற்றி என்பது இவர் தந்தைக்கு எட்டாக்கனியாக இருந்தது. பின் இவரது நல்ல நேரம் நம்முடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது திமுக. பாட்டாளி மக்கள் கட்சி தயவுடன் மட்டுமே 2 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றிப் பெற்றார் இந்த வாரிசு அரசியல்வாதி. பாமக தயவில்லாமல் இருந்திருந்தால் இவரது அரசியல் வாழ்க்கை சொந்த ஊரிலேயே முடங்கி போயிருக்கும் என்பதை அரியலூர் பெரம்பலூர் மாவட்ட மக்கள் நன்கு அறிவார்கள்.

ஜெயங்கொண்டம் நிலக்கரி சுரங்கத்திற்கு பதிமூன்று கிராம அப்பாவி விவசாயிகளின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்க முயன்ற போது, அண்ணன் மாவீரர் அவர்கள் கடுமையாக போராடியதோடு என்னை மீறி ஒரு பிடி மண்ணை கூட அள்ள முடியாது என அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனால் அவர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு அவருக்கு பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி லைசென்சும் ரத்து செய்யப்பட்டது. பாமக போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு அணி திரண்டிருந்த விவசாயிகளை பிரித்து அழைத்து சென்று அதிக தொகை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அவர்களின் நிலங்களை விற்க செய்து, நிலங்களை கையகப்படுத்துவதற்கு தொடக்கமும் முதலுமாக நின்றவர் இவரது தந்தை சிவசுப்ரமணியம்தான் என்பதை இந்த கிராமத்தில் வாழும் மக்கள் இன்றளவும் பேசிக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் செய்துவிட்டு வழக்கம்போல நிலக்கரி நிறுவனத்திடம் மாவீரர் பெட்டி வாங்கிவிட்டாரென வதந்தி பரப்பியதும் இந்த குடும்பம்தானே. இப்படி ஜெயங்கொண்டம் பகுதி விவசாயிகளை காட்டிக் கொடுத்து தங்களது செல்வத்தை பெருக்கி கொண்டு வாழ்கிற குடும்பம் இவர் ஒருவரின் குடும்பம்தானே. வேறெந்த திமுக வன்னியர் குடும்பம் இவர்களால் வாழ்ந்துள்ளது.

மாவீரர் அவர்கள் மறைந்த பிறகு பல வதந்திகளையும், அவதூறுகளையும் வாரி இறைத்தது இந்த கும்பல். இக்கும்பலின் சூழ்ச்சிகளை உணர்ந்த வன்னியர்கள் இவர்களது குற்றச்சாட்டுகளை இம்மியளவும் ஏற்காமல் அலைகடலென திரண்டு மாவீரர் மணிமண்டப திறப்பு விழாவில் கலந்து கொண்டார்கள். இதை கண்டு விரக்தியடைந்த இக்கும்பல் இப்போது பிதற்ற ஆரம்பித்துள்ளது.

இதை சட்டப்படியும் சரி இல்லை எப்படி வேண்டுமானாலும் சரி எதிர்கொள்ள நாங்கள் தயார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் மருத்துவர் அய்யா அவர்களின் வழியில், அண்ணன் மாவீரர் அவர்களோடு பயணித்தவர்கள் என்பதை நினைவில் கொள்வது நல்லது" என வைத்தி எழுதியுள்ளார். 

காடுவெட்டி குரு மறைந்து ஒன்றரை வருடங்கள் ஆன பிறகு, இவ்வளவு நாள் பேசாத சிவசங்கர் இப்போது பேச காரணம் என என்னவென்று பாமகவினரிடம் கேட்டால், "இந்த கேள்விக்கான பதில் சிவசங்கர் எழுதிய பதிவிலேயே இருக்கிறது, "குருவுக்காக கூடிய இளைஞர்கள் கூட்டத்தை தக்க வைக்க தான், குருவின் மீது அக்கறையான இந்தப் பேச்சு" என அவர் எழுதியுள்ளார். எங்கள் அய்யாவிற்கு உண்மையான அக்கறை தான், ஆனால் குற்றம் சுமத்தும் சிவசங்கருக்கு தான் குருவுக்காக கூடிய இளைஞர்கள் கூட்டத்தை பார்த்து தாங்கி கொள்ள முடியாமல் இப்படி பொய்யான புகார்களை அள்ளி வீசியுள்ளார்" என கூறுகிறார்கள். 

அரியலூர் பெரம்பலுர் மாவட்டங்களில் பாமக பலம் பொருந்திய கட்சி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மாவீரன் மறைந்த பிறகு நடைபெற்ற தேர்தலில் கூட, பாமக வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் வந்ததன் காரணமாக தான் தமிழகத்திலே மிகவும் இழுபறியான தொகுதியாக சிதம்பரம் தொகுதி இருந்தது. தமிழகம் முழுவதுமே திமுகவின் பொய்யான வாக்குறுதிகளாலும், ஆளுங்கட்சிகள் மீதான அதிருப்தியும் காரணமாக திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற சிதம்பரத்தில் மட்டும் தள்ளாடியது குறிப்பிட வேண்டிய ஒன்று. குரு மறைந்துவிட்டதால் இனிமேல் நம் ராஜ்ஜியம் தான் என நினைத்த சிவசங்கர் கனவில் மண் விழுந்துவிட்டது. குரு மறைந்த பிறகும் முக்கியத்துவம் பெற முடியவில்லையே என்ற கோபத்தில் காத்திருந்த சிவசங்கர், தற்போது பொய்யான புகார்களை கூறியுள்ளதாக, பாமகவினர் தெரிவிக்கிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK and DMK fight in social media about dr ramadoss speech


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->