பெண்களுக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம் எப்போது? சட்டசபையில் வெளியாகும் அறிவிப்பு?விஜய் முக்கிய மீட்டிங்! - Seithipunal
Seithipunal


சென்னை: தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு மாநிலம் முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணத் திட்டத்தை அமல்படுத்துவோம் என தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அறிவித்திருந்த நிலையில், அந்த திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மகளிர் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற போக்குவரத்துத் துறை ஆய்வுக் கூட்டத்தில், மகளிரின் கட்டணமில்லா பயணத் திட்டம் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

தற்போது மாநிலத்தில் நடைமுறையில் உள்ள ‘மகளிர் விடியல் பயணத் திட்டம்’ தொடரும் நிலையில், தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவச பயண வசதி எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பி வருகின்றன. இதனால், வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இதுகுறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், போக்குவரத்துத் துறையின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இயங்கும் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தற்போது 21,527 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு சுமார் 2.05 கோடி பயணிகள் அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இதில் 64 சதவீத பயணிகளுக்கு கட்டணமில்லா சேவை வழங்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், 1,000 பேருக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் 98.40 சதவீத பகுதிகளுக்கு அரசு பேருந்து சேவை சென்றடைகிறது என்றும் முதல்வரிடம் விளக்கப்பட்டது.

பயணிகள் வசதியை மேம்படுத்தும் வகையில், புதிய மென்பொருள் மற்றும் GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பேருந்துகளின் புறப்பாடு, வருகை மற்றும் பேருந்து நிறுத்தங்கள் பற்றிய தகவல்களை 24 மணி நேரமும் கண்காணிக்கும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்களை அமைக்கும் திட்டமும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அதேபோல், மகளிரின் மாநிலம் முழுவதும் கட்டணமில்லா பயணத் திட்டம், சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரப் பேருந்துகளின் பயன்பாட்டை அதிகரித்தல், போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் மற்றும் அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணுதல் ஆகியவை குறித்தும் முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியதாக கூறப்படுகிறது.

மேலும், இனி கொள்முதல் செய்யப்படும் புதிய பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளாக இருக்க வேண்டும், பயணிகளுக்கான ஸ்மார்ட் கார்டு அடிப்படையிலான பணமில்லா பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்த வேண்டும், நகர்ப்புறங்களில் Bus Rapid Transit System (BRTS) திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண்களுக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணத் திட்டம் குறித்து அரசின் இறுதி முடிவு எப்போது வெளியாகும் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், இந்த ஆய்வுக் கூட்டம் அதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இதனால், வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மகளிர் மத்தியில் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

When will free travel for women be available on all buses Will an announcement be made in the Assembly Vijay key meeting


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->