தவெக கூட்டணி முடிவு என்ன? பாஜவுக்கு தவெக பச்சைக் கொடி! கூட்டணி கன்பாஃர்மா?அரசியல் வட்டாரங்களில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
What is the outcome of the tvk alliance tvk green flag for BJP Will the alliance be finalized Expectations are increasing in political circles
வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான ஆலோசனைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எந்த அணியில் சேரும் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலானோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து விஜய் தனது அரசியல் முடிவை குறித்து தீவிரமாக யோசித்து வருவதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாத இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக தலைமையிலான அணியும் தொகுதி பங்கீடு குறித்து தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
முதன்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தவெக ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்ததாக கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் திமுக கூட்டணியிலேயே தொடர முடிவு செய்ததால், தவெக தனித்து போட்டியிடும் வாய்ப்பும் பேசப்பட்டது.
இதற்காக தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிர்வாகிகளை விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து நேர்காணல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. அப்போது தேர்தல் செலவுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள 40 லட்சம் ரூபாய் செலவு வரம்பை விட அதிகமாக செலவிட வேண்டிய சூழ்நிலை இருக்கலாம் என்று கூறப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை பல நிர்வாகிகள் சமாளிக்க முடியாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையைத் தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் தலைமையில் மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளை அறிய ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 130 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கூட்டணியில் சேர வேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் சமீபத்தில் தனி விமானத்தில் டெல்லி சென்றார். அவர் அங்கு பாஜக தலைவர்களை சந்திக்கலாம் என்ற தகவல்கள் வெளியானது. ஆனால் இதை தவெக தரப்பும், தமிழக பாஜக தலைவர்களும் மறுத்துள்ளனர்.
தவெக இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் யூகங்கள் மட்டுமே; கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையே தொண்டர்கள் நம்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய் பாஜக தலைவர்களை சந்திக்கவில்லை; சிபிஐ விசாரணைக்காக மட்டுமே டெல்லி சென்றுள்ளார் என்று விளக்கம் அளித்துள்ளார்.
அதேசமயம், தவெக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமானால் 50 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்படி நடந்தால் அதிமுக குறைவான தொகுதிகளில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் தவெகவில் உள்ள சில முக்கிய நிர்வாகிகள் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று விஜய்யிடம் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே திமுக அரசியல் எதிரி என்றும், பாஜக கொள்கை எதிரி என்றும் விமர்சித்து விட்டு தற்போது கூட்டணி சேர்ந்தால் கட்சியின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் என்று அவர்கள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தவெக எந்த கூட்டணியில் சேரும் அல்லது தனித்து போட்டியிடுமா என்பது தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. விஜய் எடுக்கும் இறுதி முடிவு தேர்தல் அரசியல் சமன்பாடுகளை மாற்றக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
English Summary
What is the outcome of the tvk alliance tvk green flag for BJP Will the alliance be finalized Expectations are increasing in political circles