சட்டம்-ஒழுங்கு என்ன ஆச்சு...?- ஊராட்சி மன்றத் தலைவர் கொலையால் கொதித்தெழுந்த கனிமொழி எம்பி...!
What happened law and order Kanimozhi MP enraged by murder Panchayat President
வள்ளியூர் அருகே கண்ணநல்லூரில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன், மர்ம நபரால் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வள்ளியூர் அருகே கண்ணநல்லூரில் ஏற்பட்ட மோதலின்போது, ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் மர்ம நபரால் கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக் கோரி போராடிய பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டிருந்த மக்கள் பிரதிநிதி ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் கவலைக்குரியதாகும்.
கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்பிச் செல்லும் நிலை ஏற்பட்டிருப்பது, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் மட்டுமின்றி மக்கள் பிரதிநிதிகளுக்குக்கூட பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள அனைத்து காரணங்களையும் முழுமையாக விசாரித்து, கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
What happened law and order Kanimozhi MP enraged by murder Panchayat President