விருந்து வேற, கூட்டணி வேற...! முதல் கூட்டத்தை தவிர்த்த இந்திய கம்யூனிஸ்ட்...! - செப்டம்பர் 9 கூட்டத்தில் பங்கேற்குமா...?
Another party another alliance Indian Communist Party skipped first meeting Will it participate September 9 meeting
தமிழக அரசியல் களத்தில் புதிய கூட்டணி கணக்குகள் உருவாகி வரும் நிலையில், த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்து வரும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை அமைச்சர்கள் நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். மேலும், வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ள கூட்டணி கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தல், மாநில அரசியலில் பல்வேறு எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.

தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்த தி.மு.க.வுக்கு இந்த தேர்தல் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், அரசியல் பயணத்தை தொடங்கிய சில ஆண்டுகளிலேயே ஆட்சியை கைப்பற்றிய த.வெ.க.வுக்கு இது மிகப்பெரிய அரசியல் வெற்றியாக அமைந்தது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வும் குறிப்பிடத்தக்க பின்னடைவை சந்தித்தது.தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணி அமைப்பிலும் எதிர்பாராத மாற்றங்கள் அரங்கேறின.
தேர்தலுக்கு முன்பு ஒரு அணியில் இடம்பெற்றிருந்த சில கட்சிகள், தேர்தலுக்குப் பிறகு புதிய அரசியல் அணியை நோக்கி நகர்ந்தன.அந்த வகையில், ஆட்சி அமைப்பதற்கு ஆதரவாக த.வெ.க.வுடன் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, வி.சி.க., ம.தி.மு.க. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
தற்போதைய ஆட்சிக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் கூட்டணியை அடுத்தடுத்த தேர்தல்களையும் எதிர்கொள்ளும் வகையில் வலுப்படுத்தும் முயற்சியாக, கடந்த ஜூலை 1-ந்தேதி த.வெ.க. ஆதரவு கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு முதல்-அமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் தலைமை தாங்கினார்.
இதில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த முதல் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் பங்கேற்கவில்லை. கூட்டணிக்கு பொதுவான பெயர் சூட்டுவது, ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்குவது, பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், த.வெ.க. மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களுமான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் நேற்று கூட்டணிக்கு ஆதரவு அளித்து வரும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை நேரில் சந்தித்தனர்.இதன் ஒரு பகுதியாக சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகங்களுக்கு சென்ற அவர்கள், அந்த கட்சிகளின் மாநில செயலாளர்களான வீரபாண்டியன் மற்றும் சண்முகத்தை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பின்போது கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.இதைத்தொடர்ந்து சென்னை அண்ணாநகரில் உள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் இல்லத்திற்குச் சென்ற த.வெ.க. நிர்வாகிகள், அவரையும் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்றார்.
அதேபோல், வைகோவை சந்தித்த பிறகு அவர் கூறுகையில், “முதல்-அமைச்சருக்கு உற்ற துணையாக இருக்கும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்துள்ளோம். அந்தக் கூட்டத்தில் முதல்-அமைச்சரும் பங்கேற்கிறார்” என்றார்.இதனைத் தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறும்போது, “த.வெ.க. கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு முதல்-அமைச்சர் சார்பில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டத்தில் அவசியம் பங்கேற்போம்” என்று தெரிவித்தார்.இதனால், வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ள த.வெ.க. ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் கூட்டணிக்கான பொதுவான பெயர் தொடர்பாக முக்கிய முடிவு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, முதல் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பங்கேற்காத நிலையில், 9-ந்தேதி நடைபெறும் 2-வது கூட்டத்தில் அக்கட்சி பங்கேற்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அவர் கூறியதாவது,“இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக் குழு இன்று கூடுகிறது. அதன்பிறகு எங்களுடைய நிர்வாகக் குழு, செயற்குழு மற்றும் மாநிலக்குழு கூட்டங்கள் நடைபெற உள்ளன.
முதல்-அமைச்சர் தெரிவித்ததாக அமைச்சர்கள் கூறிய கருத்துகள் குறித்தும் அந்தக் கூட்டங்களில் விவாதிப்போம். அதன்பிறகு எங்களுடைய நிலைப்பாடு குறித்து பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு தெரிவிப்போம்.மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளித்து த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு அளித்தோம். அதேபோல், மக்களின் அதிகாரத்தின் மீது ஆளுநர் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதற்காகவும் த.வெ.க. அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தோம்.
நாங்கள் கூட்டணியிலும் இல்லை; அமைச்சரவையிலும் இடம்பெறவில்லை.வெளியில் இருந்து ஆதரவு அளித்தாலும், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளுக்காக எந்தவித சமரசமும் இல்லாமல் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அரசு மக்கள் நலனுக்கான நல்ல திட்டங்களையும், சரியான அரசியல் திசையையும் நோக்கி பயணிக்கும்போது அதற்கு ஆதரவு அளிப்போம்.முதல் கூட்டம் விருந்து நிகழ்ச்சியாகவே அமைந்தது.
அதில் கூட்டணி குறித்து பேசுவது எங்களுடைய உடன்பாடாக இருக்காது. நாங்கள் பங்கேற்றால், அந்தக் கூட்டணியில் இணைந்துவிட்டோம் என்ற தோற்றம் ஏற்படலாம். விருந்தின் தன்மை மாறிவிடக்கூடாது என்பதற்காக, முதல்-அமைச்சரிடம் எங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டு அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.தற்போது கூட்டணி தொடர்பாக அழைப்பு வந்துள்ளது. அதுகுறித்து நாங்கள் தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாது. கட்சியின் உரிய அமைப்புகள்தான் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
English Summary
Another party another alliance Indian Communist Party skipped first meeting Will it participate September 9 meeting