தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு ஆட்சியில் இருக்கும் நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு முதல்வர் தரப்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் சமீபத்திய பேச்சுகள் குறித்து முதல்வர் விஜய் கடும் அதிருப்தி அடைந்ததாகவும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மூலம் முதல்வரின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்ட பின்னரே இருவரின் பேச்சிலும் மாற்றம் ஏற்பட்டதாகவும் தவெக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பெரும்பான்மைக்குத் தேவையான பலம் இல்லாத தவெக அரசுக்கு காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு வழங்கி வரும் நிலையில், காங்கிரஸ், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளன.
இந்தச் சூழலில்தான், கூட்டணிக் கட்சிகளின் சில கோரிக்கைகள் மற்றும் தலைவர்களின் பொதுவெளிப் பேச்சுகள் முதல்வர் விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, விசிகவுக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள சமூகநீதித் துறைக்கு பதிலாக முக்கியத்துவம் வாய்ந்த வேறு அமைச்சகத்தை ஒதுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் திருமாவளவன் பேசியதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு மற்றும் பல்வேறு வாரியப் பதவிகள் தொடர்பாகவும் திருமாவளவன் மறைமுகமாக சில கோரிக்கைகளை முன்வைத்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இந்த விவகாரங்கள் முதல்வர் விஜய்யின் கவனத்துக்குச் சென்ற நிலையில், அவர் தனது முக்கிய ஆலோசகர்களான ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி மற்றும் தனிச்செயலாளர் ஜெகதீஸ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அந்த ஆலோசனையில், இரண்டு எம்.எல்.ஏ.க்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு அமைச்சர் பதவியையும் பெற்றுள்ள நிலையில், அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, அடிக்கடி அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்ற வகையில் பேசுவது தேவையற்றது என்றும், அப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டால் இடைத்தேர்தலை சந்திக்கவும் தயாராக இருக்கலாம் என்றும் ஆலோசனையில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்தே, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை முதல்வர் விஜய் அழைத்துப் பேசியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்போது, “அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற விரும்பினால், அதையும் அவர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்பதை தெரிவியுங்கள். இதை சாதாரணமாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ சொல்லலாம். நான் கூறியதாகவே தெரிவியுங்கள்” என்ற தொனியில் முதல்வர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஆதவ் அர்ஜுனா விசிக தலைவர் திருமாவளவனை தொடர்புகொண்டு முதல்வரின் நிலைப்பாட்டை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது, “முதல்வர் என்னை தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்” என்று திருமாவளவன் விளக்கம் அளித்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த சம்பவத்திற்குப் பிறகே, விஜய் அரசுடன் நேரடி மோதல் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் திருமாவளவன் தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டதாக தவெக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதற்கு உதாரணமாக, டெல்லி பிரதிநிதியாக விஜய்யின் நண்பர் வெங்கடநாராயணா நியமிக்கப்பட்ட விவகாரம் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த நியமனத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திருமாவளவன் மட்டும் அந்த நியமனத்தை வெளிப்படையாக ஆதரித்தார்.
அதுமட்டுமின்றி, “தவெக அரசிடம் நாங்கள் எந்த டிமாண்டும் வைக்கவில்லை. திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை. துறை மாற்றமும் கேட்கவில்லை” என்று திருமாவளவன் பின்னர் விளக்கம் அளித்ததும் கவனத்தை ஈர்த்தது.
இதனால், முதல்வர் தரப்பில் இருந்து சென்றதாக கூறப்படும் கடுமையான செய்திக்குப் பிறகே திருமாவளவன் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
இந்தச் சூழலில், மாமல்லபுரத்தில் நடைபெற்ற தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்காக அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா கூட்டணிக் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
ஆதவ் அர்ஜுனா திருமாவளவனை சந்தித்தபோது, “எங்கள் மீது எந்த கோபமும் இல்லையே?” என்று திருமாவளவன் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
அதற்கு அமைச்சர்கள், “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கூட்டத்தில் அவசியம் பங்கேற்க வேண்டும்” என்று மட்டும் கூறிவிட்டு சென்றதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருமாவளவன் தொடர்பான இந்த விவகாரம் அடங்குவதற்குள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் ஒரு பேச்சும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
“மதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால், இடைத்தேர்தலில் அவர்களை மீண்டும் வெற்றி பெறச் செய்வேன் என்று முதல்வர் விஜய் கூறினார்” என்ற வகையில் வைகோ பேசியதாக தகவல்கள் வெளியாகின.
ஏற்கனவே, விஜய் ஆட்சி அமைத்த விதம் மற்றும் அரசை தக்கவைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், வைகோவின் இந்த கருத்து தவெக அரசுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, ஆட்சி அமைப்பதிலும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதிலும் குதிரைப் பேர அரசியல் நடைபெறுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் சூழலில், வைகோவின் பேச்சு அந்த குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்ததாக தவெக தரப்பில் கருதப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் குறித்து உளவுத்துறையும் முதல்வரிடம் தனது கவலையை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மாமல்லபுரம் கூட்டத்திற்கான அழைப்பை வழங்க அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா வைகோவை சந்தித்தபோது, அவரது சர்ச்சைக்குரிய கருத்து குறித்து முதல்வரின் அதிருப்தியையும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னரே, “மதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியது நான்தான். முதல்வர் விஜய் அப்படிச் சொல்லவில்லை” என்று வைகோ விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
திருமாவளவன் தனது கோரிக்கைகள் தொடர்பாக அடுத்தடுத்து விளக்கம் அளித்ததும், வைகோ தனது முந்தைய பேச்சை தெளிவுபடுத்தியதும் ஒரே நேரத்தில் நடந்துள்ளதால், இதன் பின்னணியில் முதல்வர் விஜய் தரப்பில் இருந்து சென்றதாக கூறப்படும் எச்சரிக்கை இருக்கலாம் என்று தவெக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கூட்டணி அரசை நடத்தி வரும் விஜய், தோழமைக் கட்சிகளின் கோரிக்கைகளை எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வார்? பொதுவெளியில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான பேச்சுகளை எவ்வாறு கையாளப்போகிறார்? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
குறிப்பாக, பெரும்பான்மை பலம் இல்லாத அரசு என்பதால் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கலாம் என்ற கணக்கை முறியடிக்கும் வகையில், “தேவைப்பட்டால் இடைத்தேர்தலையும் சந்திக்கலாம்” என்ற கடுமையான நிலைப்பாட்டை விஜய் எடுத்திருப்பதாக கூறப்படும் தகவல் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதன் மூலம், “கூட்டணியில் இருக்கலாம்; ஆனால் அரசை மிரட்டும் வகையில் செயல்படக் கூடாது” என்ற தெளிவான செய்தியை தோழமைக் கட்சிகளுக்கு முதல்வர் தரப்பு அனுப்பியுள்ளதா என்ற விவாதமும் எழுந்துள்ளது.
திருமாவளவன் மற்றும் வைகோவின் அடுத்தடுத்த விளக்கங்களுக்குப் பின்னால் உண்மையிலேயே முதல்வரின் எச்சரிக்கை இருந்ததா என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும், கூட்டணிக் கட்சிகளின் சமீபத்திய பேச்சுகளும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் விளக்கங்களும், தவெக கூட்டணி அரசுக்குள் நடக்கும் அதிகார சமநிலை தொடர்பான விவாதத்தை தமிழக அரசியலில் தீவிரப்படுத்தியுள்ளன.