வேலை காட்டிய விஜய்! 'ராகுலின் அரசியல் முதிர்ச்சியின்மையே காரணம்'! திமுக - காங்கிரஸ் மோதல் தீவிரம்! - Seithipunal
Seithipunal


சென்னை: தேசிய அளவிலும் தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளும், ராகுல் காந்தியின் அரசியல் முதிர்ச்சியின்மையுமே காரணம் என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி தனது தலையங்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளது. இதற்கு தமிழக காங்கிரஸ் தரப்பும் பதிலடி கொடுத்துள்ளதால், திமுக - காங்கிரஸ் இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

முரசொலி தலையங்கத்தில், "ஒற்றுமையைப் பற்றி ராகுல் காந்தி தற்போது பேசுவது காலம் கடந்த ஞானோதயம். ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குலைத்ததே காங்கிரஸ் மற்றும் ராகுலின் செயல்பாடுகள்தான்" என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட இடதுசாரி கட்சிகள், சமாஜ்வாதி கட்சி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸ் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் பரவிய பிறகே ராகுல் காந்தி தனது உரையை வெளியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் முரசொலி குறிப்பிட்டுள்ளது.

கேரள அரசியல் தொடர்பாக, "பினராயி விஜயனை மோடி அரசு ஏன் கைது செய்யவில்லை? இருவருக்கும் ரகசிய உடன்பாடு இருக்கிறது" என்று ராகுல் காந்தி முன்பு கூறிய கருத்தை மேற்கோள் காட்டிய முரசொலி, இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், "இடதுசாரிகளுக்கும் பாஜகவுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக ராகுல் காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இடதுசாரிகளின் பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு காங்கிரஸிடம் இருந்து சான்றிதழ் தேவையில்லை" என்று விமர்சித்ததாக தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா, "இடதுசாரிகள் இப்போது இடதுசாரிகளாக இல்லை" என்ற ராகுலின் கருத்து அவரது அரசியல் முதிர்ச்சியின்மையைக் காட்டுவதாக கூறியதையும் முரசொலி எடுத்துரைத்துள்ளது.

அதேபோல், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "இந்தியா கூட்டணியில் இருந்து திமுக மற்றும் ஆம் ஆத்மி விலகியிருப்பது மிகப்பெரிய பின்னடைவு" என்று கூறியதையும், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ், "பீகாரில் காங்கிரஸ் தலைவர்களுக்கும் பாஜக தலைவர்களுக்கும் இடையே ரகசிய உடன்பாடுகள் இருந்ததா என்ற சந்தேகம் உள்ளது" என தெரிவித்ததையும் தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழக அரசியல் குறித்தும் முரசொலி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தபோதும் காங்கிரஸ் பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் மூலம் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், அதற்கு ராகுல் காந்தியின் ஒப்புதலும் இருந்ததாகவும் தலையங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், "சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்துவிட்டு, நாடாளுமன்றத் தேர்தலின் போது மீண்டும் ஆதரவு கோருவது எப்படி நியாயமாகும்?" என முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு பதிலடியாக தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் விஜயன் வெளியிட்ட அறிக்கையில், "ராகுல் காந்தியை தொடர்ந்து கொச்சைப்படுத்தி எழுதுவது திமுகவின் ஆணவத்தையும் அகங்காரத்தையும் காட்டுகிறது. இரண்டு எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ள கட்சிக்கு அமைச்சர் பதவி வழங்கியது முதல்வர் விஜயின் பெருந்தன்மையை காட்டுகிறது. அதனால்தான் திமுகவுடன் இருந்த கட்சிகள் தற்போது தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் அரசியல் உறவு, தற்போதைய அரசியல் மாற்றங்களால் கடுமையான மோதலாக மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. முரசொலியின் கடுமையான விமர்சனங்களுக்கும், காங்கிரஸ் தரப்பின் ஆக்ரோஷமான பதிலுக்கும் இடையே உருவாகியுள்ள இந்த மோதல், இந்தியா கூட்டணியின் எதிர்காலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Stirs Up Trouble Rahul Political Immaturity is the Reason DMK Congress Rift Intensifies


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->