விஜய் தான் என் அரசியல் தேர்வு… தி.மு.க.வில் சேரமாட்டேன்! - செங்கோட்டையன் அதிரடி பேட்டி
Vijay my political choice wont join DMK Sengottaiyan sensational interview
த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தன்னைச் சுற்றி பரவி வரும் அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.“நான் தி.மு.க.வில் சேரப்போகிறேன் என்று பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எதிர்த்த கட்சியில் நான் இணைவேன் என்பது கனவிலும் நடக்காத ஒன்று” என்று திட்டவட்டமாகக் கூறினார்.விஜய் குறித்து பேசிய அவர், “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல மக்கள் மனதில் இடம் பிடிக்கக்கூடிய நல்ல தலைவர் விஜய்.
அதனால்தான் த.வெ.க. எனக்கு சரியான அரசியல் மேடையாகத் தோன்றியது. இன்று விஜய்க்கு குறைந்தது 34 சதவீத வாக்கு ஆதரவு இருக்கிறது. த.வெ.க.வை தி.மு.க.வின் ‘பி’ டீம் என்று சொல்லுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு. ஈரோடு மக்கள் சந்திப்பிலேயே தி.மு.க.வை ‘தீய சக்தி’ என விஜய் வெளிப்படையாக அறிவித்துள்ளார்” என்றார்.
விஜயின் கொள்கைகள் குறித்து சந்தேகம் எழுப்புபவர்களுக்கு பதிலளித்த செங்கோட்டையன், “காஞ்சீபுரத்தில் விஜய் அறிவித்த திட்டங்களே அவரது அரசியல் பாதையின் அடையாளம்” எனக் குறிப்பிட்டார்.தன் அரசியல் வாழ்க்கையின் முக்கிய தருணங்களை நினைவு கூர்ந்த அவர், “கூவத்தூர் சம்பவத்தின் போது சசிகலா தனிப்பட்ட முறையில் என்னை அழைத்து முதலமைச்சர் பதவியை ஏற்கச் சொன்னார். ஆனால் நான் அதை மறுத்தேன்.
அ.தி.மு.க. ஒன்றுபடவேண்டும் என்பதற்காக பா.ஜனதாவிடம் பேசினேன். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது” என்றார்.மேலும், “எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்தியதே நான் தான்.
நான் வளர்த்த ஒருவரே என்னை கட்சியில் இருந்து நீக்கியதை நினைத்து, இரண்டு நாட்கள் தூங்காமல் அழுதேன். நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று மனக்குமுறலுடன் கூறினார்.காங்கிரஸ் குறித்து அவர், “இன்று காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்துள்ளது. அவர்கள் எந்த திசையில் செல்வார்கள் என்று கணிப்பது கடினம்.
ஒரு பிரிவினர் எங்களுடன் கூட்டணி அமைக்க விரும்பி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்” என்றார்.திருப்பரங்குன்றம் விவகாரம், 100 நாள் வேலை சட்டத்திருத்தம் போன்ற விஷயங்களில் கருத்து கூறாததால், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க விஜய் திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்விக்கு, “பா.ஜ.க. த.வெ.க.வின் கொள்கை எதிரி என்பதில் விஜய் தெளிவாக இருக்கிறார்” என்று பதிலளித்தார்.
பா.ஜ.க.–அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா என்ற கேள்விக்கு, “அது தலைவர்களின் மனநிலையைப் பொறுத்தது” என அரசியல் வாசலை திறந்துவைத்தார்.
English Summary
Vijay my political choice wont join DMK Sengottaiyan sensational interview