பூணூல் தரித்த கவுல் பிராமணர் ராகுல் காந்தி..., பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - வானதி சீனிவாசன்!
vanathi srinivasan say about rahul gandhi hindu issue
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இந்து மத நம்பிக்கைகள், சடங்குகள் மீது நம்பிக்கையில்லாதவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தலில் தொடர் தோல்வி என்றதும், இந்துவாக நடிக்கத் தொடங்கினார்.
ஆனாலும், அது மக்களிடம் எடுபடவில்லை. வட மாநிலங்களில் தன்னை இந்துவாக, பூணூல் தரித்த கவுல் பிராமணராக காட்டிக் கொள்ளும் அவர், கோயில்கள் நிறைந்த தமிழகத்துக்கு வந்தால் மட்டும் இந்து கோயில்களுக்கு செல்ல மாட்டார். இப்போது பாத யாத்திரை என்ற பெயரில் சொகுசு கேரவன் யாத்திரை தொடங்கியுள்ள ராகுல், கன்னியாகுமரியில் கிறிஸ்தவ பாதிரியார்களுடன் உரையாடல் நடத்தியுள்ளார்.
ஆனால், யாத்திரை தொடங்கிய இடத்தில் உள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்குச் செல்லவில்லை. சுசீந்திரம் வந்த அவர், தாணுமாலையன் கோயில், நாகர்கோயில் நாகராஜா கோயிலுக்கும் செல்லவில்லை. இதற்கெல்லாம் நேரமில்லாத, மனமில்லாத ராகுல், நாட்டையும், பாரத மாதாவையும் கொச்சைப்படுத்திய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை சந்தித்து பேச நேரம் இருந்திருக்கிறது.
கடந்த 2021, ஜூலை 18-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடந்த கூட்டத்தில், மண்டைக்காடு பகவதி அம்மனை இழிவுபடுத்தி பேசியவர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா. "பாரத மாதாவிடம் உள்ள அசிங்கம் நம்மிடம் வந்து விடக்கூடாது என்பதற்காக 'ஷூ' போட்டு கொள்கிறோம்" என்று பேசியவர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.
ஜார்ஜ் பொன்னையாவின் இந்து மத வெறுப்பு பேச்சை, தேசவிரோத பேச்சை, ராகுல் காந்தி ஏற்கிறாரா என்பதை அவர் தெளிவுப்படுத்த வேண்டும். இப்போது ஜார்ஜ் பொன்னையாவிடம் என்ன பேசினார் என்பதையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இதற்காக நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
English Summary
vanathi srinivasan say about rahul gandhi hindu issue