இடிக்கப்பட்ட கோவில் கொதித்தெழுந்த வைகோ.! வெளியிட்ட பரபரப்பு அறிவிக்கை.!! - Seithipunal
Seithipunal


இலங்கையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் உடைப்பிற்கு வைகோ கண்டனம் தெரிவித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற குமுளமுளை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில், தமிழ் மக்கள் வழிபட்டு வந்த கிராமிய ஆதிசிவன் ஐயனார் ஆலயம்,  சூலம் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் உடைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த ஆலய சின்னங்கள் அனைத்தும் காணாமல் செய்யப்பட்டுள்ளன.

அந்த இடத்தில் குருந்தாசேவ பௌத்த விகாரையின் சிதைவுகள் இருப்பதாகத் தெரிவித்து, இராணுவத்தின் ஆதரவோடு தொல்லியல் ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த அகழ்வு ஆராய்ச்சிப் பணிகளை இலங்கை இராணுவத்தினர் புடை சூழ தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க, தொல்லியல் அமைச்சகத்தின் செயலாளர், முல்லைத் தீவு பாதுகாப்புப் படைகளின் தளபதி ஜெகத் ரத்நாயக ஆகியோர் பௌத்த ஆகம முறைப்படி பிரித் ஓதி தொடங்கி வைத்தனர்.  புத்தர் சிலை ஒன்றைக் குருந்தூர்மலை பகுதிக்குக் கொண்டுவந்து வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழர்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

இன்னும் சில மாதங்களில் அந்த இடத்தில் இருந்து பௌத்த கல்வெட்டுகளும், சிதைவுகளும் மீட்கப்பட்டன என்றும், பௌத்தர்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்றும் கூறி,  மேலும் ஒரு பௌத்த விகார் கட்டி, புத்தர் சிலையும் அமைத்து விடுவார்கள் என தமிழ் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தண்ணிமுறிப்பு குளத்துக்கு அருகில் படலைக்கல்லு என்னும் இடத்திலும் மற்றொரு விகாரைக்கான தொல்லியல் அகழ்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த இடம்  ‘கல்யாணபுர’ என அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.

குருந்தூர் மலை இடம் தொடர்பான விவகாரத்தில், ஒட்டுசுட்டான் காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கில், முல்லைத் தீவு நீதிமன்றம் கடந்த 2018 இல் பிறப்பித்த உத்தரவில், அங்கே உள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆலயத்தில் மக்கள் வழிபடலாம். இரு சாராரும் எந்தவிதமான கட்டுமானங்களையும் செய்ய முடியாது. தொல்லியல் ஆய்வாளர்கள் மட்டுமே ஆய்வுகளைச் செய்யலாம். வேறு தரப்பினர் ஆய்வுகளைச் செய்ய முடியாது. தொல்லியல் ஆய்வுகளைச் செய்வதாக இருந்தால் யாழ் பல்கலைக் கழக தொல்லியல் துறையின் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இராணுவத்தினர் நூற்றுக் கணக்கில் குவிக்கப்பட்டு, இராணுவமே தொல்லியல் ஆய்வுகளைச் செய்வது போல கொடிகளை நாட்டி, தொல்லியல் ஆய்வு என்ற பேரில் பௌத்த விகாரையை நிர்மாணித்து, தமிழ் மக்களுக்குச் சொந்தமான பிரதேசத்தைச் சிங்களமயப் படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப் படுகின்றது.

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இந்து கோயில்கள் இடித்து நொறுக்கப்பட்டது பற்றி நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, இதுவரை எந்தக் கண்டனமும் தெரிவித்தது இல்லை; நடவடிக்கையும் எடுத்தது இல்லை; செய்திக் குறிப்பு எதுவும் வெளியிட்டதும் இல்லை.

அதனால் கேள்வி கேட்பார் இல்லை என்ற ஆணவத்தில், சிங்கள இனவெறி அரசு தொடர்ந்து அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவகிறது. இதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அண்மையில் இலங்கைக்கு சென்று வந்த அயல்உறவு அமைச்சர், தமது பயணத்தில் சாதித்தது என்ன? என்பதை நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்; இந்துக் கோயில்களை இடிப்பது குறித்து, இந்திய அரசின் கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vaiko statement on jan 19


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->