முதலமைச்சர் விஜய் மேஜையில் 3 ஃபைல்கள்! 7 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றால் என்ன நடக்கும்?விஜய்யின் அடுத்த மாஸ்டர் பிளான்?
Three files on Chief Minister Vijay desk What happens if TVK wins all seven constituencies What is Vijay next master plan
தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தனது அரசியல் கணக்குகளை வகுக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டப்பேரவையில் தனது பலத்தை அதிகரிப்பது ஒருபுறம் என்றால், எதிர்க்கட்சிகளின் அரசியல் தாக்குதல்களை எதிர்கொள்வது மறுபுறம் என இருமுனை வியூகத்துடன் தவெக களமிறங்கத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
தற்போதைய கணக்குப்படி தவெகவிடம் 107 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும், தனிப்பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்கள் தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடைபெறவுள்ள 7 தொகுதிகளின் இடைத்தேர்தலில் அனைத்திலும் வெற்றி பெற்றால், தவெகவின் சட்டமன்ற பலம் 114 ஆக உயரும். இதன்மூலம் தனிப்பெரும்பான்மைக்கு இன்னும் 4 உறுப்பினர்கள் மட்டுமே தேவைப்படும்.
கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் பட்சத்தில், ஆட்சியைத் தொடர்வதில் பெரிய சிக்கல் இருக்காது என்பதே தவெகவின் அரசியல் கணக்காக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த இடைத்தேர்தலை வெறும் தொகுதி வெற்றியாக மட்டும் தவெக பார்க்கவில்லை என்றும், சட்டப்பேரவையில் தனது பலத்தை நிரூபிப்பதற்கான முக்கிய வாய்ப்பாக கருதுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுங்கட்சியாக இருந்துகொண்டே 7 தொகுதிகளையும் கைப்பற்றினால், அது மக்கள் மத்தியில் அரசுக்கு இருக்கும் ஆதரவுக்கான முக்கியமான அரசியல் செய்தியாக அமையும் என்றும் கட்சி கணக்கிடுவதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் முதல்வர் விஜய்யின் சமீபத்திய சட்டப்பேரவை பேச்சும் அரசியல் கவனம் பெற்றுள்ளது. நிதித்துறை ஆய்வு தொடர்பான மூன்று முக்கிய கோப்புகள், உரிய ஆதாரங்களுடன் தனது மேஜையில் இருப்பதாகவும், எதை எப்போது வெளியிட வேண்டுமோ அந்த நேரத்தில் வெளியிடப்படும் என்றும் விஜய் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“டேபிள் மீதுள்ள அந்த 3 ஃபைல்களை எப்போது திறந்து பார்ப்பீர்கள்?” என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், அந்தக் கோப்புகள் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கியுள்ளன.
இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் நேரத்தில், முதலமைச்சரின் மேஜையில் இருப்பதாகக் கூறப்படும் அந்தக் கோப்புகளில் உள்ள விவரங்கள் வெளியிடப்படலாம் என்றும், அதன் மூலம் தேர்தல் களத்தில் ஆளுங்கட்சிக்கு அரசியல் பலன் கிடைக்கும் என்றும் தவெக வட்டாரத்தில் கணக்கு போடப்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள் வெளியாகும் பட்சத்தில், அது எதிர்க்கட்சிகளுக்கு எதிரான தேர்தல் பிரசார ஆயுதமாக மாறும் என்றும், அதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் அரசின் செல்வாக்கை அதிகரிக்க முடியும் என்றும் தவெக தரப்பில் எதிர்பார்க்கப்படுவதாக தெரிகிறது.
ஆனால், அந்தக் கோப்புகள் வெளியிடப்பட்டால் அவற்றின் உண்மைத் தன்மை, ஆவணங்களின் நம்பகத்தன்மை, ஆதாரங்களின் சட்டரீதியான நிலை உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் நிச்சயம் கேள்வி எழுப்பும். ஏற்கனவே “உங்கள் உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் திமுக பயப்படாது” என எதிர்க்கட்சித் தரப்பில் சவால் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கோப்புகளை வெளியிடுவது மட்டுமல்லாமல், அவற்றில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகளை உரிய ஆதாரங்களுடன் நிரூபிப்பதும் விஜய் அரசுக்கு மிகப்பெரிய சவாலாக மாறலாம்.
இதனால் 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இடைத்தேர்தலில் தவெக தனது சட்டப்பேரவை பலத்தை உயர்த்துமா? விஜய் கூறிய மூன்று கோப்புகள் தேர்தல் நேரத்தில் வெளிவருமா? அவை எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அரசியல் ஆயுதமாக மாறுமா? என்பதே அடுத்தகட்ட அரசியல் பரபரப்பாக உருவெடுத்துள்ளது.
English Summary
Three files on Chief Minister Vijay desk What happens if TVK wins all seven constituencies What is Vijay next master plan