சட்டமன்ற தேர்தல்; தபால் வாக்குப்பதிவுக்காக 03 நாட்கள்; சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்..!
Three Days Allotted for Postal Voting in Chennai
சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் 16, 17, 18 ஆகிய 03 தேதிகளில் தபால் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் மூத்த குடிமக்கள் (85+), வரையறுக்கப்பட்ட மாற்றுத் திறன் கொண்ட வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
"இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு படிவம். 12D வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டது. அதில் வீட்டிலேயே வாக்களிக்க விருப்பம் தெரிவித்த 8,947 வாக்காளர்களுக்கு வீட்டிலேயே வாக்குப்பதிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் அவர்களுடைய வீட்டிலேயே அஞ்சல் வாக்குப்பதிவு செலுத்தும் விதமாக ஒரு நுண்பார்வையாளர் (Micro Observer). வாக்குப்பதிவு அலுவலர்-1 வாக்குப்பதிவு அலுவலர் 2 ஒரு காவலர். ஒரு காட்சிப்பதிவாளர். வண்டியுடன் கூடிய ஒரு ஓட்டுநர் என 6 நபர்கள் கொண்ட குழு வீதம் 96 நிலையான குழுக்கள், 4 ரிசர்வ் குழுக்கள் என மொத்தம் 100 வாக்குப்பதிவு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க விருப்பம் தெரிவித்த 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஆகியோருக்கு 16.042026, 17.04.2026 மற்றும் 1804.2026 ஆகிய நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஒரு குழுவானது நாள் ஒன்றிற்கு சுமார் 40 வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குப்பதிவை மேற்கொள்வர்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) சம்பந்தப்பட்ட வாக்காளரின் வீட்டிற்கு முன்கூட்டியே சென்று வாக்களிக்கும் நாள் மற்றும் நேரத்தை தெரிவிப்பார்கள். இந்தவகை வாக்காளர்கள் ஏதேனும் ஒரு அவசர நிமித்தம் காரணமாக வீட்டில் இல்லையென்றால் அவருக்கு மீண்டும் ஒருமுறை மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு வாக்குச்சாவடி குழு மீண்டும் அந்த வீட்டிற்கு சென்று அவரது வாக்கினை பதிவு செய்வார்கள். குறிப்பிட்ட நாளன்று வாக்குப்பதிவு அலுவலர்கள் அடங்கிய குழு நேரடியாக வாக்காளரின் வீட்டிற்கு சென்று வாக்குச்சீட்டினை வழங்குவார்கள்.
இதன்பின்னர், சம்பந்தப்பட்ட வாக்காளர் இரகசியமாக வாக்களிப்பதை உறுதி செய்து. உறுதி மொழிப்படிவத்துடன் வாக்குச்சீட்டை அதற்கான பெரிய உறையில் வைத்து ஒட்டி வாக்குப்பெட்டியில் வாக்காளர்கள் செலுத்துவார்கள். வாக்குப்பதிவு செய்யும் குழுவினர் ஒவ்வொரு நாளும் வாக்காளரின் வீடுகளுக்கு செல்கின்ற நாள், நேரம் மற்றும் செல்லும் பாதை அட்டவணை முன்கூட்டியே வேட்பாளர்களுக்கு தெரிவிக்கப்படும். இந்த வாக்குப்பதிவு நிகழ்வினை வேட்பாளர்கள் அல்லது அனுமதி பெற்ற முகவர்கள் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி பார்வையிடலாம்.
இந்த வாக்குப்பதிவு நிகழ்வு அனைத்தையும் வாக்காளரின் வாக்குப்பதிவு இரகசியத்தன்மை பாதிக்கப்படாமல் காட்சிப்பதிவாளர் ஒளிப்பதிவு மேற்கொள்வார்கள். இவ்வாறாக, அன்றைய தினம் முழுவதும் சேகரிக்கப்பட்ட வாக்குச்சீட்டு அடங்கிய சீலிடப்பட்ட பெட்டியினை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மேற்படி குழு அலுவலர்கள் வழங்குவார்கள். வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பெட்டி சீலிடப்பட்டு அதன் எண்ணிக்கையினை பதிவேட்டில் பதிவு செய்து அதற்கான பாதுகாப்பு அறையில் (Strong Room) வைத்து சீலிடப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர் மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன். இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.
English Summary
Three Days Allotted for Postal Voting in Chennai