டெல்லி கூட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் தேச விரோதிகளா?! வேதனையில் குமுறும் திருமாவளவன்! - Seithipunal
Seithipunal


கொரோனாவை விடவும் கொடியது வெறுப்பு அரசியல், வெறுப்புப் பிரச்சாரம் வேண்டாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா அபாயத்தில் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் திட்டமிட்ட வெறுப்புப் பிரச்சாரத்தில் சிலர் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது. வெறுப்பைப் பரப்பாதீர்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தப்லீக் ஜமாத் அமைப்பின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என தெரியவந்துள்ளது. அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமே முன்வந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்; தம்மை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதையடுத்து அம்மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் தம்மை மருத்துவ பரிசோதனைக்கு இப்போது உட்படுத்திக் கொண்டுள்ளனர் என தமிழக மருத்துவத் துறையின் அரசு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாடு சட்டவிரோதமாக நடத்தப்பட்டது அல்ல. வழக்கமாக நடத்தப்படும் ஒன்றுதான் என்பதை அதை நடத்திய தப்லீக் ஜமாத் அமைப்பின் நிர்வாகிகள் தெளிவுபடுத்தி உள்ளனர். இந்நிலையில் அதில் பங்கேற்றவர்கள் அனைவரையும் தேசவிரோதிகள் போல சித்திரித்தும், அவர்கள் ஏதோ கொரோனாவைப் பரப்புவதற்காகவே அங்கு கலந்து கொண்டார்கள் என்பது போலவும் ஒரு தோற்றத்தை ஒருசில சமூகவிரோதிகள் ஏற்படுத்திவருகின்றனர். இதனை முன்வைத்து ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை அவர்கள் மேற்கொண்டுவருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.

கொரோனா தொற்று ஒருவரையொருவர் தொட்டால்தான் பரவும் என்று கூறப்படுகிறது. ஆனால், வெறுப்புப் பிரச்சாரம் பார்க்காமலேயே பரவக்கூடியது. எனவே, கொரோனாவைவிட வெறுப்புப் பிரச்சாரம் மிகவும் ஆபத்தானது.

கொரோனாவை எதிர்கொள்ள நாட்டு மக்கள் அனைவரும் மனிதநேயத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்து போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மக்களிடையே மதஉணர்வின் அடிப்படையில் வெறுப்பை விதைத்து பிரிவினையை ஏற்படுத்தும் இத்தகைய வெறுப்புப் பிரசாரங்களை கைவிடவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இந்த இக்கட்டான சூழலிலும் மதம் சார்ந்த வெறுப்புப் பிரச்சாரங்களில் ஈடுபடுவோர் மீது, மத்திய மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirumavalavn condemns to spread planned Hate propaganda


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->