'பாஜ-அதிமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல': திருமாவளவன் திடீர் பல்டி..!
Thirumavalavan says the intention is not to break the BJP and AIADMK alliance
'அதிமுக மீதோ, பழனிசாமி மீதோ எங்களுக்கு எந்த காழ்ப்பும் இல்லை, அதிமுக எங்களுக்கு கொள்கை எதிரி அல்ல.' என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விடுதலை சிறுத்தை கட்சி குறித்து பல விமர்சனங்களை வைக்கிறார். அதை வரவேற்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பாஜவின் வழிகாட்டுதலின்படி, அவர் இது போன்ற விமர்சனங்களை வைக்கிறாரோ என்ற ஐயம் எழுகிறது என்றும், விடுதலை சிறுத்தை கட்சி பாஜவை தான் கொள்கை பகையாக முன்னிறுத்துகிறது தவிர, அதிமுகவை அவ்வாறு முன்னிறுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், பாஜவால் பாதிக்கப்பட்ட கூட்டணி கட்சிகள் பல. அதில் மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்ததற்கு பாஜ தான் காரணம் என்றும், கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்தி அவர்கள் முதுகில் சவாரி செய்து, அந்தந்த மாநிலங்களில் பாஜ காலூன்றி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
தற்போது அதை உத்தியை தமிழகத்திலும் பாஜ கையாள்கிறது. அதை கடைபிடித்து வருகிறது. அதிமுகவை பயன்படுத்தி இங்கே வளர துடிக்கிறார்கள். அதிமுகவை பலவீனப்படுத்த துடிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

பாஜவினர் திமுகவை ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை விட, அதிமுகவை பலவீனப்படுத்தி தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக வந்து விட வேண்டும் என்ற பதைப்பு தான் பாஜவுக்கு மேலோங்கி இருக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதை தான் விடுதலை சிறுத்தை கட்சி சுட்டிக் காட்டுகிறோம். எங்களுக்கு அதிமுக மீது ஒரு தோழமை உணர்வு இருக்கிறது. அது பாழ்பட்டு விடக்கூடாது, சிதைந்து விடக் கூடாது என்கிற பொறுப்புணர்வோடு தான் இதை சுட்டிக் காட்டுகிறோம் தவிர, அதிமுக மீதோ, பழனிசாமி மீதோ எங்களுக்கு எந்த காழ்ப்பும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால், நாங்கள் திமுக கூட்டணியில் இருப்பதால் தான் பாஜவையும், அதிமுகவையும் விமர்சிக்கிறோம் என்று பலர் கருதுகிறார்கள் என்றும் திருமா கூறியுள்ளார்.

மேலும், திமுக கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜவின் கொள்கையை விடுதலை சிறுத்தை கட்சி ஒருபோதும் ஏற்காது என்று திருமா தெரிவித்துள்ளார். அத்துடன், ஏற்கனவேயும் பாஜகவை விமர்சித்து இருக்கிறோம். தொடர்ந்து விமர்சிப்போம் என்று அறிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், பாஜ- அதிமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது அவர்களது நோக்கம் அல்ல என்றும், அதிமுக ஒரு திராவிட இயக்கம். ஈவெரா கொள்கையை பேசுகின்ற இயக்கம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களை முன்னிறுத்தி இயங்குகிற இயக்கம் என்பதால் சில கருத்துக்களை நட்புணர்வோடு தான் முன் வைக்கிறோம். அது தேவையற்றது என்றால் நாங்கள் பேசப் போவதில்லை என்று மேலும் திருமாவளவன் கூறியுள்ளார்.
English Summary
Thirumavalavan says the intention is not to break the BJP and AIADMK alliance