மீண்டும் பேசுபொருளாகும் கரூர் விவகாரம்! அன்றே விஜய் மீது வழக்கு போடாதது ஏன்? திமுக கிட்ட உளவுத்துறை தந்த ரிப்போர்ட்? - Seithipunal
Seithipunal


திமுகவுக்கு இன்று நீதிமன்றம் மூலம் பலத்த அடி விழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கரூர் விவகாரத்தில் சம்பவம் நடந்தபோதே நடிகர் விஜய் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல், அன்றைய திமுக அரசு ஏன் மென்மையான போக்கைக் கடைப்பிடித்தது என்ற கேள்வி சமூக வலைதளங்களில் மீண்டும் எழத் தொடங்கியுள்ளது. இந்தக் கேள்விகள் தற்போது பல்வேறு அரசியல் விவாதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.

கரூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்கும், அவர்களுக்கான அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்குவதற்கும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வரும் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கரூருக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பயணத்தை எதிர்த்து திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முதலமைச்சர் விஜய்யின் பெயர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராக எங்கும் சேர்க்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியது.

மேலும், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை ஒரு முதலமைச்சர் சந்திப்பது எப்படி சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக அமையும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுவைத் திரும்பப் பெறாவிட்டால் தள்ளுபடி செய்யப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வேறு வழியின்றி திமுக தரப்பில் அந்த மனு அவசரமாக வாபஸ் பெறப்பட்டது. நீதிமன்றத்தில் ஏற்பட்ட இந்தச் சூழல் திமுகவுக்கு அரசியல் ரீதியாக பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், இந்த விவகாரம் பல பழைய கேள்விகளையும் மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.

கரூர் சம்பவம் நடந்தபோதே விஜய் மீது சட்டப்படி எப்ஐஆர் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும், ஆரம்பத்திலேயே திமுக அரசு சட்ட நடவடிக்கை எடுக்காமல் மென்மையான போக்கைக் கடைப்பிடித்தது மிகப்பெரிய அரசியல் தவறு என்றும் திமுகவின் சில மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களும் அப்போதே அதிருப்தி தெரிவித்ததாக கூறப்பட்டது.

இப்போது நீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்குப் பிறகு அந்த முணுமுணுப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன. கரூர் சம்பவம் நடந்தபோது விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமே நேரடியாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஸ்டாலின், அரசியல் நோக்கத்தோடு எதையும் கூற விரும்பவில்லை என்றும், விசாரணை ஆணையத்தின் மூலம் உண்மை வெளிவரும் என்றும், அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

அன்றைய சூழலில் ஸ்டாலின் மிகவும் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடித்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே விஜய், தனது மீது பழி போட நினைத்தால் துணிவிருந்தால் நேரடியாக வந்து பழிவாங்குங்கள் என்று ஸ்டாலினுக்கு பகிரங்கமாக சவால் விடுத்தார்.

அப்போதும் திமுக தலைமை அமைதி காத்தது அக்கட்சியின் சில மூத்த தலைவர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியதாக கூறப்பட்டது. விஜய் மீது அப்போதே சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்பதே அவர்களின் ஆதங்கமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே விஜய்யை கைது செய்வதால் ஏற்படும் அரசியல் விளைவுகள் குறித்து உளவுத்துறை மூலம் கருத்தறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் செய்திகள் கசிந்தன.

விஜய்யை கைது செய்தால் அது அவருக்கு அனுதாப அலையை உருவாக்கி, அரசியல் ரீதியாக மிகப்பெரிய ஆதாயத்தை கொடுத்துவிடும் என்று திமுக தலைமையிடம் சிலர் ஆலோசனை வழங்கியதாக கூறப்பட்டது. இதனால் அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்காமல், மக்களின் மனநிலையை அறிந்த பிறகு முடிவு செய்யலாம் என்ற நிலைப்பாட்டை திமுக எடுத்ததாகவும் சொல்லப்பட்டது.

இதற்காக உளவுத்துறை போலீசாரும் சில தனியார் அமைப்புகளும் தமிழகம் முழுவதும் ரகசிய கருத்துக்கணிப்பு நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. சாலையோர வியாபாரிகள், விவசாயிகள், வணிகர்கள், பட்டதாரிகள், இளைஞர்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது.

அந்த கருத்துக்கணிப்பில் கரூர் பிரசாரக் கூட்டத்திற்கு காவல்துறை போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என்று பலர் கூறியிருந்தாலும், விஜய் மீது அரசு சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்ற கருத்தும் அதிகமாக பதிவாகியதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அந்த கருத்துக்கணிப்பு முடிவுகளையும் மீறி அன்றைய திமுக தலைமை எடுத்த மென்மையான முடிவுதான் இன்று நீதிமன்றத்தில் அந்தக் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டியிலும் கரூர் விவகாரத்தில் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையை அரசியல் அறிந்தவர்களும் மனசாட்சி உள்ளவர்களும் பாராட்டியதாக தெரிவித்திருந்தார்.

41 பேர் உயிரிழந்த நிலையில் விஜய் அங்கிருந்து சென்றுவிட்டதாக விமர்சித்த அவர், இரவோடு இரவாக சம்பவ இடத்திற்கு சென்றவர் ஸ்டாலின் என்றும் கூறியிருந்தார்.

திமுக ஆட்சியில் எந்த அதிகாரியை வைத்து விசாரணை நடத்தப்பட்டதோ, அதே அதிகாரியைத்தான் தற்போதைய விஜய் அரசும் நியமித்திருப்பதாகவும், திமுக அரசு எந்த அளவுக்கு நடுநிலையோடு செயல்பட்டது என்பதற்கு இதுவே உதாரணம் என்றும் ஆர்.எஸ்.பாரதி வாதிட்டிருந்தார்.

ஆனால் தற்போதைய நீதிமன்ற நிகழ்வுக்குப் பிறகு சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் மீண்டும் அதிருப்திக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

கரூர் பேரவலத்தில் விஜய்யை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, கைது செய்து சிறைப்படுத்தியிருக்க வேண்டும் என்றும், ஒரு வழக்குகூட பதிவு செய்யாமல் விஜய்யை திமுக முழுமையாக காப்பாற்றிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துருவாக்க அரசியலில் விஜய்க்கு ஆதரவாக பேசி அதிமுகவும் அவரை காப்பாற்றிவிட்டதாக கூறியுள்ள இடும்பாவனம் கார்த்திக், இரண்டு திராவிடக் கட்சிகளும் நீதியை நிலைநாட்ட முயலாமல் தங்களது எதிர்கால அரசியலை மனதில் வைத்தே முடிவெடுத்ததாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக தொண்டர்களும் தங்களது ஆதங்கத்தையும் ஆற்றாமையையும் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

கரூர் வழக்கில் இதுவரை என்ன விசாரணை நடத்தப்பட்டது என்று உச்ச நீதிமன்றம் ஏன் கேள்வி எழுப்பவில்லை என்றும், நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடைபெறும் நிலையில் ஒரு அமைச்சர் சாட்சிகளை பாதிக்கும் வகையில் பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்தால் அதுகுறித்து ஏன் கவனம் செலுத்தப்படவில்லை என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விஜய் மீது அன்றைக்கே வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என்றும், ஆரம்பத்தில் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டு இப்போது திமுக தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பதாகவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இன்றைய நீதிமன்ற நிகழ்வு எப்படி இருந்தாலும், மக்கள் மத்தியில் சில அடிப்படையான கேள்விகள் இன்னும் பதில் கிடைக்காமல் இருக்கின்றன.

கரூர் பிரசாரக் கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்தது சரியா? மிகப்பெரிய கூட்டத்திற்கு வந்திருந்த மக்களுக்கு போதுமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததா? இப்படிப்பட்ட ஆபத்தான கூட்டங்களுக்கு மக்கள் பெருமளவில் திரண்டது சரியா? சம்பவத்திற்குப் பிறகு வீடியோ வெளியிட்ட விஜய், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறாதது ஏன்?

அதேபோல், இந்த சம்பவத்துடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்புபடுத்தி அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எந்த அளவுக்கு சரியானது என்பதும் கேள்வியாகவே உள்ளது.

41 உயிர்களை பலிகொண்ட கரூர் பேரவலத்தின் உண்மையான காரணம் என்ன, அதற்கு யார் பொறுப்பு, அரசியல் கணக்குகளைத் தாண்டி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முழுமையான நீதி கிடைக்குமா என்பதே இறுதியில் மிக முக்கியமான கேள்வியாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Karur issue is back in the spotlight Why wasnot a case filed against Vijay back then What report did the Intelligence Wing submit to the DMK


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->