ஊடகவியலாளர் விஜயன் விவகாரம்: தமிழ்நாடு இதுவரை பார்த்திராத பேரவலம்! முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்த சீமான்!
The Journalist Vijayan Incident A massive tragedy unlike anything Tamil Nadu has ever witnessed Seeman harshly criticizes Chief Minister Vijay
புதிய தலைமுறை தொலைக்காட்சி நெறியாளர் விஜயன் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் விவாதங்கள் மற்றும் நேர்காணல்களை திறம்பட நடத்தி வரும் ஊடகவியலாளர் விஜயனை விசாரணை என்ற பெயரில் காவல்துறை அழைத்து சென்று அச்சுறுத்துவது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை நேர்காணல் செய்ததற்காகவே விஜயனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, அவரது செல்போனை பறிமுதல் செய்து, கண்ணியக்குறைவாக நடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் கண்டனத்திற்குரியவை என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது ஒரு தனிப்பட்ட சம்பவம் மட்டுமல்லாமல், மற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களுக்கும் விடுக்கப்படும் வெளிப்படையான எச்சரிக்கையாக பார்க்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தவெக அரசின் ஆட்சிக்கு எதிராக விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள சீமான், கருத்துரிமை மற்றும் ஊடகச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.
திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளுக்கு மாற்றாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் முதலமைச்சர் விஜய், இதுவரை இல்லாத வகையில் தொலைக்காட்சி நெறியாளரையே குறிவைத்து நடவடிக்கை எடுப்பது தமிழக அரசியல் வரலாற்றில் கவலைக்குரிய முன்னுதாரணமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பெருந்தலைவர் காமராசர், அம்பேத்கர், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களின் பெயர்களை கூறிக்கொண்டே, ஆட்சியின் மீது எழும் விமர்சனங்களை ஏற்கும் மனப்பக்குவம் மற்றும் சகிப்புத்தன்மை இல்லாமல் செயல்படுவது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
விசாரணை என்ற பெயரில் ஊடகவியலாளர் விஜயனுக்கு எந்தவித நெருக்கடியும் ஏற்படுத்தாமல், உடனடியாக அவரை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
The Journalist Vijayan Incident A massive tragedy unlike anything Tamil Nadu has ever witnessed Seeman harshly criticizes Chief Minister Vijay