வேலூர் சட்டக் கல்லூரியில் புதிய நூலக கட்டிடம், கொல்லி மலையில் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் திட்டப்பணிகள்: இன்று திறந்து வைக்கும் முதல்வர்..! - Seithipunal
Seithipunal


இன்று காலை 10.15 மணியளவில், சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொள்ளவுள்ளார். அப்போது காணொலி காட்சி வாயிலாக பல்வேறு மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவுள்ளதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (13.10.2025) திங்கட்கிழமை காலை 10.15 மணியளவில்,

01- சட்டத் துறை சார்பில் மதுரை அரசு சட்டக் கல்லூரியில் 48 கோடியே 20 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிருவாக தொகுதி கட்டடங்கள் மற்றும் வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் 6 கோடியே 46 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடம் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்கள்.

02- சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் - ஜவ்வாது மலை, கரூர் மாவட்டம் - பொன்னனையார் அணை மற்றும் நாமக்கல் மாவட்டம் - கொல்லிமலை ஆகிய இடங்களில் சுற்றுலாத் தலங்களை உலகத்தரத்தில் மேம்படுத்தும் நோக்கில் 7.46 கோடி செலவில் முடிவுற்ற 4 திட்டப் பணிகளை திறந்து வைத்து, 16.30 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள்.

03- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் சென்னை – செனாய் நகர் மற்றும் மதுரை மாநகர் – அண்ணா நகர் ஆகிய இடங்களில் 43.88 இலட்சம் ரூபாய் செலவிலான ”அரண்” திருநங்கையர்களுக்கான இல்லத்தினை திறந்து வைக்கிறார்கள்.

04- தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) தொழில் பூங்காக்களில் அமைத்துள்ள 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள், 120 கோடி ரூபாய் செலவில் விழுப்புரம் மாவட்டத்தில் 157.91 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள திண்டிவனம் மெகா உணவு பூங்கா மற்றும் 70 கோடி ரூபாய் செலவில் தேனி மாவட்டத்தில் 123.49 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள தேனி மெகா உணவு பூங்கா ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்கள்.

05- இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 43 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 திருக்கோயில்களில் 4 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு உதவி ஆணையர் அலுவலக கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 48 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் 7 திருக்கோயில்களில் 13 முடிவுற்ற பணிகள், ஒரு இணை ஆணையர் அலுவலகம், 13 ஆய்வர் அலுவலகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்கள்.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உதவி பொறியாளர் (மின்), இளநிலை வரைதொழில் அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 83 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 16 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்கள். என்று  தமிழக அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Chief Minister will inaugurate the new library building at Vellore Law College today


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->