தொழில்நுட்பக் கோளாறா? மனிதத் தவறா? விமான சம்பவத்தில் பதில் தேடும் விசாரணை... நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன?
Technical malfunction or human error investigation seeks answers plane incident What do eyewitnesses say
மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார். விமானம் பாராமதி பகுதி அருகே தரையிறங்கத் தயாராகிய தருணத்தில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்தது.

கண் இமைக்கும் நேரத்தில், விமானம் தரையில் மோதி சிதறி விழுந்து, பெரும் விபத்திற்குள்ளானது.இன்று காலை 8.45 மணியளவில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில், தரையில் விழுந்த விமானம் உடனடியாக தீப்பற்றி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இந்த விபத்தில் துணை முதல்வர் அஜித் பவார் உட்பட, அவருடன் பயணித்த பாதுகாவலர்கள் 2 பேர் மற்றும் விமானத்தை இயக்கிய விமானிகள் 2 பேர் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.நாட்டின் மூத்த அரசியல் தலைவர் சரத் பவாரின் அண்ணன் அனந்த்ராவ் பவாரின் மகனான அஜித் பவார் (வயது 67), மராட்டிய அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கியவர்.
அவர் இதுவரை 6 முறை மராட்டிய மாநில துணை முதல்வராக பதவி வகித்துள்ளார். நிதித்துறை, மின்சாரம் உள்ளிட்ட முக்கியமான துறைகளை திறம்பட நிர்வகித்த அனுபவம் கொண்டவராகவும் அவர் அறியப்பட்டார்.சரத் பவாரின் அரசியல் வாரிசு யார் என்ற கேள்வியில் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, அஜித் பவார் தனிப்பாதையில் அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
அவரது தலைமையிலான அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. தற்போது மராட்டியத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசில், அஜித் பவாரின் கட்சி மூன்றாவது பெரிய அரசியல் சக்தியாக உள்ளது. அவரது அகால மறைவு, மராட்டிய அரசியலில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விமான விபத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்ததாவது,"இந்த விபத்தை நான் என் கண்களால் பார்த்தேன். அந்த காட்சி இன்னும் என் மனதை உலுக்குகிறது. விமானம் கீழே இறங்கும் போது ஏதோ தவறு நடக்கப் போகிறது என்று உணர்ந்தேன்.
சில நொடிகளில் அது தரையில் மோதி, பயங்கரமான வெடிப்பு சத்தம் கேட்டது. உடனே விமானம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அதன் பிறகு 4 முதல் 5 முறை தொடர்ந்து வெடிப்புகள் ஏற்பட்டன.அங்கு இருந்த பலரும் ஓடிவந்து விமானத்திற்குள் இருந்தவர்களை மீட்க முயன்றனர்.
ஆனால் தீ மிகுந்ததால், யாராலும் அருகே செல்ல முடியவில்லை. விமானத்தில் அஜித் பவார் இருந்தார் என்பதை அறிந்ததும், அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தோம். இந்த துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
English Summary
Technical malfunction or human error investigation seeks answers plane incident What do eyewitnesses say