தவெக எம்.எல்.ஏ விடம் குதிரை பேரம்; செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன்; சென்னை உயர் நீதிமன்றம்..!
Senthil Balaji and Ashok Kumar granted conditional anticipatory bail in horse trading case against Tvk MLA
தவெக எம்.எல்.ஏ,விடம் குதிரை பேரம் நடத்திய விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அதாவது, சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக, சிலர் தன்னிடம் பேரம் பேசியதாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என்.இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
குறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீஸார், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 09 பேரை கைது செய்துள்ளனர்.

அத்துடன், இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தும், அவர்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
மேலும், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அசோக் குமார் மற்றும் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த இரு வழக்குகளும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், இருவரின் முன்ஜாமீன் வழக்குகளில் எதிர்த்து வாதிடுவதற்காக மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால், வழக்கில் விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைக்க வேண்டுமென சென்னை காவல் துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை பிற்பகலுக்கு இந்த வழக்கை தள்ளிவைத்தார். இதனைத் தொடர்ந்து, இரு தரப்பு வாதங்களுக்குப் பின், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.
இருப்பினும், இருவரும் தினமும் காலை, மாலை காவல் துறை விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என அந்த உத்தரவில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Senthil Balaji and Ashok Kumar granted conditional anticipatory bail in horse trading case against Tvk MLA