அதிமுக இப்போது வரை பலவீனமாகவே உள்ளதாகவும், அதை மாற்றுவது தான் தன் வேலையென சசிகலா கூறியுள்ளார்.தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (திங்கள்கிழமை), சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் தொண்டர்களுக்கு சசிகலா இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சும், ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என்று செயல்பட்டு வருகிறது. இதை மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் எனவும், தூய்மைப் பணியாளர் விவகாரம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தூய்மை பணியாளர் விவகாரத்தில், கடந்த 2016 தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் உரிய வழிவகை காண ஜெயலலிதா திட்டமிட்டு இருந்தார். அது குறித்து தனக்கு முழுமையாக தெரியும் என்றும், அதன் பின்புஅவர் மறைந்து விட்டதால் பல மாற்றங்கள் ஏற்பட்டன என்று கூறியுள்ளார்.
அத்துடன், 2020-இல் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் மேற்கொண்டனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தார். மேலும், 2021 தேர்தல் அறிக்கையிலும் தூய்மைப் பணியாளர் நலனுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் அவர், எதையும் செயல்படுத்தவில்லை என்றும், தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிப்படி நீங்கள் நடந்து கொண்டீர்களா..? என முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், திமுக அரசுக்கு எத்தனை துறைகள் உள்ளன என்றும், எத்தனை செயலர்கள் உள்ளனர், அவர்களை எப்படி வேலை வாங்க வேண்டும் என்று எதுவுமே தெரியவில்லை. தெரியாமல் வெறுமனே ஆட்சியில் வந்து அமர்ந்து மக்களை பிழிந்து எடுக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
வெறும் விளம்பரத்தால் திமுக ஆட்சியைப் பிடித்து விடலாம் என நினைக்கிறது. ஆனால், அவர்களை ஆட்சிக்கு வர விட மாட்டேன் என்றும், நான் கடந்த 39 ஆண்டுகளாக அரசு நிர்வாகத்தை அறிந்தவளாக இருக்கிறேன். இன்று மக்களை பார்க்கவே எனக்கு கஷ்டமாக உள்ளது என்று சசிகலா கூறியுள்ளார்.
ரேஷன் கடையில் பொருட்கள் இருப்பதில்லை. இதை மறைப்பதற்காக வீடுகளுக்கே வந்து ரேஷன் பொருட்களை கொடுக்கிறோம் என்ற திட்டத்தை திமுக அரசு அறிவிக்கிறது என்றும், இது செய்ய முடியாத திட்டம். இதை செய்வேன் என செயல்படுத்துகின்றனர். ஏமாற்றியே ஆட்சி காலத்தை கழிக்கலாம் என்று காலத்தை கழித்துக் கொண்டிருக்கின்றனர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

அத்துடன், காலாவதியான சுங்கச்சாவடிகள் மூடப்படும் என்று அறிவித்தனர். ஆனால், அதையும் அவர்கள் செய்யவில்லை. தமிழக மக்கள் நலன் சார்ந்து திமுக அரசு சிந்திப்பதே இல்லை என்றும், பின்னர் மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் இந்த தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் 66,000 கி.மீ. புறவழிச் சாலைகள் உள்ளன. அதில் வண்டலூர் -மீஞ்சூர் புறவழிச் சாலையில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மக்களிடமிருந்து எவ்வளவு பணத்தை தான் நீங்கள் வாங்குவீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மக்கள் அரசாங்கத்தை உங்கள் கையில் கொடுத்த நாள் முதல் நீங்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களை இதற்காகவா மக்கள் ஆட்சிக்கு கொண்டு வந்தனர் என்றும், மக்களுடைய பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுப்பதற்காகவா..? என்று பேசியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்றும், மது கடைகளாக திறந்து வருகின்றன. அதனால் இந்த ஆட்சியை கீழே இறக்குவதற்கான அனைத்து வேலைகளையும் செய்வேன் என்றும் கூறியுள்ளார். திமுகவை நிச்சயம் ஆட்சிக்கு வர விடமாட்டோம் என்றும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தென்னாப்பிரிக்கா போன்று ஆகிவிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளளார்.
மேலும், ஜெயலலிதா இருக்கும்போது தமிழகம் மின் மிகை மாநிலமாக இருந்தது என்றும், 2015 -16 காலகட்டத்தில் அதிகப்படியான மின் உற்பத்தியை வெளியில் விற்று இருக்கிறோம். ஆக, திமுக மீண்டும் ஆட்சிக்கு வர மக்களே விட மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஸ்டாலினின் மகன் கார் ரேஸ் நடத்துவதற்காக ரூ.200 கோடி செலவிடுகிறார். இவரால் நெல் கொள்முதல் நிலையங்களில் குடோன் கட்ட முடியாதா என்று கேள்வி கேட்டுள்ளார். வேண்டுமென்றே கட்டாமல் மழையில் நனையச் செய்கின்றனர். மத்திய அரசு உதவியுடன் குடோன்களை கட்டலாம். அதெல்லாம் மக்களின் மீது உண்மையான அன்பு வைத்தவர்கள் மட்டுமே செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜெயலலிதா ஆட்சியில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது மிகவும் குறைவு என்றும், அந்தந்த துறை செயலாளர்களை அனுப்பி உரிய நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்று வருவார். திமுக அரசு எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழியை போட்டு, அரசு நடத்தாமல் அரசியல் செய்கின்றனர் என்றும், ஸ்டாலின் தொடர்ந்து கட்சி தலைவராக செயல்படுகிறார் ஆனால், முதல்வராக செயல்படவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், அதிமுக இப்போது வரை பலவீனமாகவே உள்ளது என்றும், அதை மாற்றுவது தான் என் வேலை என்றும், அதை செய்யாவிட்டால் மக்களுக்கு அதிக சிரமம் ஆகிவிடும் என்றும், அதிமுகவில் நிலவும் சிக்கலை புதிதாக வந்த யாராலும் தீர்க்க முடியாது. அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்று பேசியுள்ளார்.
அத்துடன், ஜெயலலிதா ஒரு நாளும் ரோடு-ஷோ சென்று கை கொடுத்துக் கொண்டு சென்றதே கிடையாது. அது முதல்வரின் வேலை இல்லை என்றும், நீங்கள் நிர்வாகத்தை பார்க்க வேண்டும், உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், மத்திய அரசை திட்டுவதும், மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்று கூறுவதும் தான் திமுக அரசின் வேலையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், 2026-இல் நிச்சயம் ஜெயலலிதா ஆட்சி வரும் என்றும், அந்த திறமை எங்களிடம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், திமுக அரசை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளதாகவும், திமுக ஆட்சியில் கவுன்சிலர், எம்எல்ஏக்கள் அராஜகம் தான் நடக்கிறது என்றும், ஜெயலலிதா ஆட்சியில் அப்படி நடக்குமா..? என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளளார்.